தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் மக்கள்தொகை 1.2% அதிகரிப்பு

2 mins read
91224795-9c79-464a-bdba-e47fce1a2b94
சிங்கப்பூர் மக்கள்தொகை விரைவில் மூப்படைவதும் தெரிய வந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மக்கள்தொகை கடந்த ஆண்டு 1.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி மக்கள்தொகை 6.11 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.

மக்கள்தொகை அதிகரித்ததற்கு, இங்கு நிரந்தரமாகத் தங்கும் திட்டம் இல்லாதோர் முக்கியக் காரணம். கட்டுமானத் துறையில் பணியாற்றும், வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் உள்ளிட்டவர்கள் அத்தகையோரில் அடங்குவர் என்று தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு மக்கள்தொகைச் சுருக்கமான அறிக்கை திங்கட்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரின் மக்கள்தொகை வெகு விரைவில் மூப்படைந்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், கூடுதல் சிங்கப்பூரர்கள் ஒற்றையராக இருக்கின்றனர்.

அதேவேளை, பிறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை ஓரளவு நற்செய்தியும் உள்ளது. 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடியுரிமையுடன் 29,237 குழந்தைகள் பிறந்தன. சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஒரு பெற்றோரையாவது கொண்டுள்ள குழந்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

2023ஆம் ஆண்டில் 28,877 குழந்தைகள் பிறந்தன. அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு பதிவான எண்ணிக்கை 1.2 வுழுக்காடு அதிகமாகும்.

2023ல் சிங்கப்பூர்வாசிகளிடையே கருத்தரிப்பு விகிதம் வரலாறு காணாத அளவு குறைவாகப் பதிவானது. அப்போது பதிவான 0.97 விழுக்காடு கருத்தரிப்பு விகிதத்தில் தற்போது மாற்றம் இல்லை.

ஒவ்வொரு பெண்ணும் சராசரியாகப் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையை இவ்விகிதம் குறிக்கிறது.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் 3.66 மில்லியன் குடிமக்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு பதிவான 3.64 மில்லியனைவிட சற்று அதிகமாகும்.

சிங்கப்பூரில் வசிக்கும் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. 0.54 மில்லியன் நிரந்தரவாசிகள் இங்கு வசிக்கின்றனர்.

மக்கள்தொகையில் எஞ்சிய 1.91 மில்லியன் பேர் சிங்கப்பூரில் நிரந்தரமாக வாழும் திட்டம் இல்லாதவர்கள். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் வெளிநாட்டு ஊழியர்கள். எஞ்சியவர்கள் இல்லப் பணிப்பெண்கள், இங்கு வசிப்போரைச் சார்ந்திருப்பவர்கள், மாணவர்கள் போன்றோர்.

சென்ற ஆண்டு, புதிதாகக் குடியுரிமை பெற்றவர்களில் 64.3 விழுக்காட்டினர் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். 32.8 விழுக்காட்டினர் இதர ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

மூன்று விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே மற்ற உலக நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

புதிதாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற அனைவரும் இங்கு நிரந்தரவாசிகளாக இருந்தவர்கள். சிங்கப்பூரில் புதிதாகக் குடியுரிமை பெற வேளிநாட்டவர்கள் முதலில் நிரந்தரவாசிகளாக இருந்திருப்பது அவசியம்.

பெரும்பாலான நிரந்தரவாசிகள் 25லிருந்து 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

ஆண்டுதோறும் சிங்கப்பூரின் மக்கள்தொகை கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக 1.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அதற்கு முந்தைய ஐந்தாண்டு காலமான 2015லிருந்து 2020ஆம் ஆண்டுக்கிடையே அவ்விகிதம் 0.5 விழுக்காடாக இருந்தது.

கட்டுமானத் துறையில் உள்ள வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது அதற்கு முக்கியக் காரணம் என்று தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்