சிங்கப்பூரில் சொத்து முதலீடுகளின் மதிப்பு 2025ஆம் ஆண்டில் ஏற்றம் கண்டது.
அரசாங்கம் மேற்கொண்ட நில விற்பனையும் அதிக வர்த்தகப் பரிவர்த்தனைகளும் கடந்த ஆண்டுக்கான முதலீட்டு மதிப்பை $40 பில்லியனுக்கு உயர்த்தின. உலகளாவிய பொருளியல் தெளிவற்ற நிலையில் இருப்பதால் வட்டி விகிதங்கள் குறைந்துள்ளதும் இந்த ஏற்றத்திற்கு ஒரு காரணம்.
நிறுவனங்களின் தேவைகள் கூடியதால், ஒட்டுமொத்த விற்பனைகள் உச்சத்தில் இருந்த காலமான 2017ஆம் ஆண்டில் எட்டிய $35.5 பில்லியனைவிட கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் அதிகம்.
இந்த மதிப்பானது $27 பில்லியன் முதல் $30 பில்லியன் வரை இருக்கும் என்று தான் கணித்திருந்ததையும் விஞ்சிவிட்டது என்று நைட் ஃபிராங்க் சிங்கப்பூர் சொத்து ஆலோசனை நிறுவனம் ஜனவரி 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“2025ஆம் ஆண்டில் அரசியல் சூழலும் பொருளியலும் நிச்சயமற்ற தன்மையுடன் இருந்தன. இருப்பினும், சிங்கப்பூரின் முதலீடுகள் சார்ந்த விற்பனைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
“வட்டி விகிதம் சற்று தளர்வடைந்ததால் முதலீட்டாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களில் கடப்பாடு கொண்டிருந்தது சிங்கப்பூர் ‘கிழக்கின் சுவிட்சர்லாந்து’ என்ற பெருமையைத் தக்கவைத்திருப்பதற்கான சான்றாக விளங்குகிறது,” என்று நைட் ஃபிராங்க் சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி கால்வன் டான் கூறினார்.
உலக அளவில் அரசியல் நிலையற்ற தன்மை இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என்ற நிலையில், முதலீடுகளுக்கான நிதிகள் தொடர்ந்து தற்செயலாக ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வாண்டின் மொத்த முதலீடுகள் $30 பில்லியன்வரை வலுவாக இருக்கும் என்று நைட் ஃபிராங்க் நிறுவனம் எதிர்பார்த்துக் கணித்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் மொத்த முதலீடுகள் 2025ஆம் ஆண்டில் 36.7 விழுக்காடு உயர்ந்து $40 பில்லியனை எட்டின.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தக முதலீடுகள் $17 பில்லியன், குடியிருப்புகளின் முதலீடு $14.6 பில்லியன், தொழில்துறைகளுக்கான முதலீடுகள் $6.2 பில்லியன் ஆகியன அதில் அடங்கும். எஞ்சிய $2.2 பில்லியன், பலவித மேம்பாட்டுத் திட்டங்கள், ஹோட்டல்கள் போன்ற இதர பரிவர்த்தனைகள் சார்ந்தவை.
முக்கியப் பரிவர்த்தனைகளில் அரசாங்க நில விற்பனைகள், தனியார் நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட பல பரிவர்த்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குடியிருப்பு சார்ந்த பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டைவிட 20.8 விழுக்காடு கூடி, $14.6 பில்லியனை எட்டின. இருப்பினும், ஒட்டுமொத்த விற்பனைகள் சற்று தளர்வுகண்டுள்ளன.

