சிங்கப்பூரின் வாடகை கார் நிறுவனமான தடா (Tada), வரும் நவம்பரில் ஹாங்காங்கில் கால்பதிக்கவுள்ளது. தொடக்கமாக, அது டாக்சி சேவையை வழங்கும்.
ஹாங்காங்கில் பெரும்பாலும் சட்டவிரோதமாக வழங்கப்படும் தனியார் வாடகை கார் சேவைகளை ஒழுங்குபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுவரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆரம்பமாக, 3,000 முதல் 4,000 வாகனங்களைச் சேவையில் ஈடுபடுத்த டாக்சி நிறுவனங்களுடன் சேர்ந்து தடா செயல்படும்.
தடாவின் தலைமை நிர்வாகி ஷான் கிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு ஜூலை 15ஆம் தேதி அளித்த பேட்டியில், “சிங்கப்பூரும் ஹாங்காங்கும் பல அம்சங்களில் ஒத்திருக்கின்றன. அதன் பொருட்டு, சிங்கப்பூரில் எங்களுக்குக் கிட்டிய வெற்றி மூலம் கிடைத்துள்ள படிப்பினையை ஹாங்காங்கிற்கு கொண்டுசெல்ல இந்த ஏற்பாடு வகைசெய்கிறது,” என்றார்.
ஹாங்காங்கில் டாக்சி உரிமம் அல்லது கார் வாடகை அனுமதி இல்லாமல் வாகனச் சேவையை ஓட்டுநர்கள் வழங்குவது சட்டவிரோதம். முதல்முறை குற்றம் புரிவோருக்கு HK$10,000 (S$1,720) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஹாங்காங்கில் தடா நிறுவனத்துக்குக் கடும் போட்டி காத்திருக்கிறது. அமெரிக்காவின் ஊபர் உட்பட 10க்கும் மேற்பட்ட வாடகை கார் நிறுவனங்களுடன் அது போட்டியிட வேண்டியிருக்கும்.
2018ல் நிறுவப்பட்டு சிங்கப்பூரில் தலைமையகம் கொண்டுள்ள தடா, இங்கு உரிமம் பெற்றுள்ள ஐந்து வாடகை கார் நிறுவனங்களில் ஒன்று.
இந்நிலையில், ஏற்கெனவே கம்போடியாவிலும் தாய்லாந்திலும் செயல்பட்டுவரும் தடா, விரிவாக்கம் செய்வதற்கான வெளிநாட்டுச் சந்தைகளில் தென்கொரியாவும் ஒன்று என திரு கிம் தெரிவித்தார்.