துடிப்பான பொருளியல் வளர்ச்சி, அதிகமான பயனீட்டாளர் செலவினம் ஆகியவற்றால் சிங்கப்பூரின் வரி வருவாய் 10.7 விழுக்காடு உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான நிதியாண்டில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், மொத்தம் $88.9 பில்லியன் வரி வசூல் செய்தது. இந்த விழுக்காடு ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலத்தில் வசூலிக்கப்பட்ட $80.3 பில்லியனைவிட 10.7 விழுக்காடு அதிகம்.
வசூலிக்கப்பட்ட மொத்த வரி வருவாய், அரசாங்கத்தின் செயலாக்க வருவாயில் சுமார் 76.9 விழுக்காட்டையும் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2 விழுக்காட்டையும் பிரதிநிதிப்பதாக ஆணையம் செப்டம்பர் 11 அன்று தெரிவித்தது.
சிங்கப்பூரில் வரிசெலுத்துவோரின் விகிதம் உயர்வாக இருந்தாலும், வேண்டுமென்றே தங்கள் வரிக் கடமைகளைத் தவிர்ப்போருக்கு எதிராக ஆணையம் உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
அண்மைய நிதியாண்டில் 8,600க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தணிக்கை செய்து விசாரித்ததாகவும், கிட்டத்தட்ட $507 மில்லியன் பெறுமானமுள்ள வரித்தொகையையும் அபராதங்களையும் மீட்டதாகவும் ஆணையம் கூறியது.
முந்தைய நிதியாண்டில் இருந்த 9,590 வழக்குகள் மற்றும் $857 மில்லியனுக்கும் அதிகமான வரி மற்றும் அபராதங்களைக் காட்டிலும் இது குறைவு.
அனைத்து வரிப்பிரிவுகளிலும் வரி வருவாய் வசூல் அதிகரித்துள்ளது.
இதில், வர்த்தக வருமான வரி மூலமான வசூல் 6.7 விழுக்காடு அதிகரித்து $30.9 பில்லியனை எட்டியுள்ளது. முந்திய நிதியாண்டுக்கான வசூல் தாெகை, $29 பில்லியனாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆணையத்தின் வருவாய் வசூலில் வர்த்தக வருமான வரி மூலமான வசூல் பெரும் பங்கினை வகிக்கிறது.
இதன் பங்கு 34.8 விழுக்காடு. எனினும், இந்த விகிதம், கடந்த ஆண்டில் பதிவான 36.1 விழுக்காட்டிலிருந்து குறைந்துள்ளது.
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், 22.6 விழுக்காட்டுடன் இரண்டாவது ஆகப் பெரிய பங்கினை வகிக்கிறது. இதன் ஒட்டுமொத்த வசூல் தொகை $20 பில்லியன் ஆகும்.
முந்தைய நிதியாண்டில் இந்தத் தொகை, $16.6 பில்லியனாக இருந்தது. இந்த உயர்வுக்கு வாடிக்கையாளர் செலவினத்தின் அதிகரிப்பும் ஜிஎஸ்டி விகிதத்தில் செய்யப்பட்ட சரிசெய்தலும் காரணமாகக் கூறப்படுகின்றன.
அதிக சம்பளத்தாலும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையின் அதிகரிப்பாலும் தனிநபர் வருமான வரி, கடந்த நிதியாண்டில் $17.5 பில்லியனிலிருந்து $19.1 பில்லியனாக உயர்ந்தது.
சொத்து வரி வசூல் $5.9 பில்லியனிலிருந்து $6.6 பில்லியனுக்கு அதிகரித்தது. அதேபோல், சொத்துப் பரிவர்த்தனை எண்ணிக்கை உயர்ந்ததால் முத்திரை வரி வசூலும் ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்த $5.8 பில்லியனிலிருந்து $6.6 பில்லியனாக உயர்ந்தது.
“மிகவும் அவசிய பொதுச் சேவைகளை ஆதரிப்பதிலும் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டுவதிலும் நமது வாழ்க்கைச் சூழலை உயர்த்துவதிலும் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சமூகத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் திரட்டப்பட்டுள்ள வரித்தொகை முக்கியப் பங்காற்றுகிறது,” என்றது ஆணையம்.