சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்புக்குப் பங்களித்த மொத்தம் 144 தொழில்கள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு இவ்வாண்டு முழுமைத் தற்காப்பு ஆதரவாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
அவற்றில் 64 விருதுகளை சிறிய, நடுத்தர தொழில்நிறுவனங்களும் 26 விருதுகளை பெரிய நிறுவனங்களும் 39 விருதுகளை அமைப்புகளும் 5 விருதுகளை தனிநபர்களும் பெற்றனர்.
ராணுவ, குடிமை, பொருளியல், சமூக, மின்னிலக்க, உளவியல் தற்காப்பில் சிறப்பாகச் சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆக உயர்ந்த விருதுகள் இவை.
சிக்கல்கள் நிறைந்த உலகில், சகிப்புத்தன்மையின்மையாலும் ஆதிக்கத்தாலும் தங்களின் சொந்த உரிமைகளின்மீது மட்டும் முழுக் கவனம் செலுத்தும் எண்ணத்தாலும் சமுதாயங்கள் பலவீனமடைகின்றன.
இந்நிலையில், சிங்கப்பூர் இன, சமய ஒற்றுமைக்கு முன்மாதிரியாகவும் மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதுடன் சொந்த உணர்வுகள் பாதிக்கப்படும்போது வன்முறை வழியில் செல்லாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கும் சமுதாயமாகவும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்.
வியாழக்கிழமை (அக்டோபர் 10) ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விருது விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
அவசர காலத்தின்போது, முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களும் உறுதியுடன் நிலைத்து நின்றதுடன் மேலும் வலுவடைந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்புக்கு வலுவாக ஆதரவளித்த அனைவருக்கும் தமது நன்றியை அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
பொருளியல், சமூக, மின்னிலக்கத் தற்காப்புத் துறைகளில் சேவையாற்றிய பெரிய நிறுவனப் பிரிவில் விருது பெற்றார் ‘என்சைன் இன்ஃபோசெக்யூரிட்டி’ நிறுவனத்தின் ஆலோசனை, வளர்ந்துவரும் தொழில் பிரிவின் தலைவர் கௌரவ் கீர்த்தி, 45.
என்சைன் நிறுவனம் அரசாங்க அமைப்புகளான சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்புடனும் மின்னிலக்க, உளவுத் துறைப் படையுடனும் இணைந்து சிங்கப்பூரின் மின்னிலக்கத் தற்காப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
என்சைன் பல்வேறு கல்விப் பின்னணிகளிலிருந்து வருவோரையும் பெண்களையும் மனநலப் பிரச்சினை உடையோரையும் பணியமர்த்துவதோடு, அவர்களை இத்துறைக்குத் தயார்ப்படுத்த பயிற்சியையும் வழங்குவதாக திரு கௌரவ் கூறினார்.
உதாரணத்திற்கு, தொடர்புத்திறன் குறைபாடுள்ளோருக்கு இணையப் பாதுகாப்புப் பணிகளில் வேலை வாய்ப்பு வழங்க தொடர்புத்திறன் குறைபாட்டுக்கான வளமை நிலையத்துடன் இணைந்து பலவித பயிற்சித் திட்டங்களை என்சைன் நிறுவனம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
“பல்வேறு திறன்கள் கொண்டவர்களை வேலையிடத்தில் ஒன்றுசேர்க்கும்போது, அனைவரையும் உள்ளடக்கிய பலதரப்பட்ட, பன்முகப் பணிச்சூழலை வழங்குவதோடு வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாகப் பணிபுரியவும் இது தூண்டுகிறது,” என்றும் அவர் கூறினார்.
மேலும், இணையப் பாதுகாப்புத் துறையில் திறன்களை மேம்படுத்த, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்புடனும் தகவல் பாதுகாப்பு நிபுணர்கள் சங்கத்துடனும் என்சைன் நிறுவனம் இணைந்து பல முயற்சிகளைச் செய்து வருவதாகவும் இது பொருளாதாரத் தற்காப்பு துறைக்குச் சேவையாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
“மற்ற நிறுவனங்களை எவ்வளவு பாதுகாக்கிறோமோ, அந்த அளவிற்கு வணிகத்தைப் பெறுகிறோம். இதனால் பொருளியல் வளர்ச்சி அடைவதோடு மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கவும் முடிகிறது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் போர்க்காலப் படைவீரர்களாகச் சேவையாற்றும் தங்கள் ஊழியர்களுக்கு என்சைன் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது என்பதற்கான அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.
நிகழ்ச்சியில் விருது பெற்ற மற்றொருவரான திரு தேவானந்தன் தமிழ்ச்செல்வி, 32, ‘மென்டல் ஆக்ட்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராவார். இவருக்கு உளவியல் தற்காப்புத் துறையில் சேவையாற்றிய தனிநபர் பிரிவில் விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூரின் தெற்காசிய சமூகத்தினருக்கு 24 மணி நேரமும் அவசர அழைப்புகளை ஏற்பதுடன் ஆலோசனைகளையும் அளித்து, மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது இவரின் அமைப்பு.
“எங்களைத் தொடர்புகொள்பவர்களுக்கு உணவும் பானமும் வழங்கி, அவர்கள் பேசுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தி தரும் ‘சப்பர் கிளப்’ என்ற திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
மேலும், மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்க வலுவான தொண்டர் கட்டமைப்பை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயத்தை ஊக்குவிக்கவும் இந்த அமைப்பு முற்படுகிறது.
“விருது பெற்றது சிங்கப்பூரின் மனநலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் சரியான திசையில் செல்கிறோம் என்பதற்கான அங்கீகாரமாகும். மேலும், இது அமைப்புக்குக் கூடுதல் வளங்களைத் திரட்டுவதற்கும் அதிகமான மக்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார் திரு தேவானந்தன்.

