அதிகாரத்துவமாகத் திறக்கப்பட்டு ஓராண்டிற்குள்ளாகவே வேளாண் தொழில்நுட்பப் பண்ணையான ‘குரோவி சிங்கப்பூர்’ மூடப்படும் என அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 நவம்பர் நடுப்பகுதியில் சாங்கியில் 8,000 சதுர மீட்டர் பரப்பளவில் அந்த உட்புற செங்குத்துப் பண்ணை அதிகாரத்துவமாகத் திறக்கப்பட்டது. கீரைகள், பச்சைக் காய்க் கலவைகள் (salad mixes) போன்றவற்றை அந்த டச்சு நிறுவனம் விளைவித்து வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அரசிதழில் குரோவி நிறுவனக் கலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடன்பொறுப்புகள் காரணமாகத் தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று குரோவி நிறுவனத்தின் இயக்குநர் ராமசாமி சொக்கலிங்கம் அந்த அறிவிப்பு வழியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 நிதியாண்டிலிருந்தே அந்நிறுவனம் இழப்பைச் சந்தித்துவருவதாகக் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் (அக்ரா) இணையத்தளம் தெரிவிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
குரோவி நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் $2.13 மில்லியன், 2024ல் $5.5 மில்லியன் இழப்பைச் சந்தித்ததாக அச்செய்தி குறிப்பிட்டது.
உள்ளூர்ப் பண்ணைகள் மூலம் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை நிறைவுசெய்யும் வகையில் சிங்கப்பூர் இலக்கை மாற்றி அமைத்துள்ள நிலையில், குரோவி நிறுவனம் மூடப்படுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2035ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் நார்ச்சத்து உணவுத் தேவையில் 20 விழுக்காட்டையும் புரதச்சத்து உணவுத் தேவையில் 30 விழுக்காட்டையும் எட்டும் வகையில் சிங்கப்பூர் தனது இலக்கைத் திருத்தியமைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சாங்கி தளவாட நிலையத்தில் உள்ள குரோவி பண்ணைக்குச் சிங்கப்பூர் உணவு அமைப்பும் நிதியுதவி வழங்கியுள்ளது.
நெதர்லாந்து, ஜெர்மனி, குவைத் ஆகிய நாடுகளிலும் குரோவி நிறுவனத்திற்குச் செங்குத்துப் பண்ணைகள் இருப்பதாக முன்னர் வெளியான செய்திகள் குறிப்பிட்டன.

