காய்கறி பயிரிடும் சிங்கப்பூரின் உட்புறச் செங்குத்துப் பண்ணையான குரோகிரேஸ் (GroGrace Vertical Farm) மூடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
அதன் இணை நிறுவனரான கிரேஸ் லிம், தொழிலைத் தக்கவைக்க கடைசி நிமிட ஆதரவையும் பங்காளித்துவத்தையும் தேடுகிறார்.
வாடகை, பயனீட்டுக் கட்டணங்களைச் செலுத்தத் தவறியதால், நகர்ப்புற வேளாண்மைக்கு உதவும் ‘அர்பன் ஃபாமிங் பாட்னர்ஸ்’ அமைப்பின்கீழ் செயல்படும் குரோகிரேஸ், பிப்ரவரி 14ஆம் தேதி மூடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
எனினும், பிற பண்ணைகள், முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலக்கெடுவை மாத இறுதிவரை நீட்டித்துள்ளதாக திருவாட்டி லிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
ஜூரோங், தொழிற்சாலை கட்டடத்துக்குள் அமைந்துள்ள அந்தப் பண்ணைக்கு ஆகும் அதிகப்படியான செயல்பாட்டுச் செலவுகளே நிறுவனம் நஷ்டத்தை எதிர்கொள்வதற்கான முக்கியக் காரணம் என்றார் அவர். பயனீட்டுக் கட்டணம் மட்டும் மாதம் கிட்டத்தட்ட $20,000 ஆகிறது. நான்கு ஊழியர்களுக்கான ஊதியம் $15,000க்கும் அதிகமாகும். பண்ணை தொடங்கியதிலிருந்து திருவாட்டி லிம் சம்பளம் எதுவும் பெறவில்லை.
பண்ணையின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் அவர், விநியோகம், விளம்பரம், மற்ற வணிக நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்.
“பூச்சிக்கொல்லி பயன்படுத்தாக, சுத்தமான காய்கறிகள் என்ற போதிலும், வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. சிங்கப்பூரில் காய்கறி விற்பது ‘ரோல்ஸ் ராய்ஸ்’ அல்லது ‘ரோலக்ஸ்’ விற்பதைவிடக் கடினமானது,” என்று திருவாட்டி லிம் கூறினார்.
வாரத்திற்கு ஒரு டன் காய்கறிகளை உற்பத்தி செய்யும் இப்பண்ணைக்கு சீனா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மலிவான இறக்குமதியே மிகப்பெரிய போட்டியாக உள்ளது. வெளிநாட்டு விவசாயிகளுக்கு அரசு மானியங்கள் கிடைக்கிறது என்றும் ஆனால், சிங்கப்பூரில் அத்தகைய உதவி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
2019இல் பண்ணை திட்டமிடப்பட்டபோது ஒரு கிலோவாட் மணி நேர மின்சாரக் கட்டணம் 15 சென்ட்டாக இருந்தது, ஆனால் 2022இல் பண்ணை தொடங்கப்பட்டபோது உலகளாவிய எரிசக்தி விலை உயர்வால் அது 33 சென்ட்க்கு மேல் இருமடங்காக அதிகரித்தது. மேலும், கோவிட்-19 தொற்றுநோயால் கட்டுமான தாமதங்கள் ஏற்பட்டன. 2020இல் செயல்படத் தொடங்கிய பண்ணையின் கடன் சுமை அதிகரித்தது. நிதி, தளவாடங்கள், ஊழியர் பற்றாக்குறையால் நிறுவனம் சிரமப்பட்டது.
பற்றாக்குறையான வங்கிக் கையிருப்புடன் பண்ணையைத் தொடங்கியதாகவும், செயல்படத் தொடங்கியதிலிருந்து லாபம் ஈட்டவில்லை என்றும் திருவாட்டி லிம் கூறினார்.
பண்ணை மூடல் பற்றி அறிந்திருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) கூறியது. வேளாண் துறையின் சவால்களை, குறிப்பாக எரிசக்தி செலவுகளால் பாதிக்கப்பட்ட உயர் தொழில்நுட்பப் பண்ணைகளின் சவால்களை உணர்ந்துள்ளதாகவும், பண்ணைகளுக்கான இடம், நிதி உதவி, சந்தை தேவையை ஆதரவு தொடரும் என்றும் அது உறுதியளித்தது.


