சிங்கப்பூரின் இளம் காற்பந்து நட்சத்திரம் கார்த்திக் ராஜ் மணிமாறன் புதன்கிழமை (ஏப்ரல் 5) காலமானார். அவருக்கு வயது 25.
சிங்கப்பூர் கல்சா சங்கம் இந்தத் தகவலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டது.
சிங்கப்பூர் காற்பந்து முதல்நிலை லீக்கில் விளையாடி வந்த கார்த்திக், தமது அணியுடன் கடந்த வாரம் கோலாலம்பூர் சென்றிருந்தார்.
ஏப்ரல் 1ஆம் தேதி திடீர் வலிப்பு ஏற்பட்டு கார்த்திக் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஏப்ரல் 2ஆம் தேதி கார்த்திக் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.
சிறந்த இளம் விளையாட்டளர்களில் ஒருவரான கார்த்திக் திறமையானவர் என்றும் அணிக்காக துடிப்புடன் செயல்படக்கூடியவர் என்றும் சங்கம் தெரிவித்தது. அவரின் மறைவுக்கு சிங்கப்பூர் காற்பந்து சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் காற்பந்து முதல்நிலை லீக்கில் 2022 பருவக் கிண்ணத்தை சிங்கப்பூர் கல்சா சங்கம் வென்றது. அந்த அணியில் கார்த்திக் இடம்பெற்று இருந்தார்.
கார்த்திக் சிங்கப்பூர் பிரிமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார்.

