அமெரிக்க டாலரின் மதிப்பு அண்மையில் வலுவிழந்திருப்பது, சிங்கப்பூர் வெள்ளியை வலுவடையச் செய்துள்ளது. விடுமுறை செல்லும் சிங்கப்பூரர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் இது நற்செய்தியாக அமைந்துவிட்டது.
ஒரு டாலருக்கு S$1.28 எனும் நிலையில் உள்ள செலாவணி விகிதம், 2014ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு இந்த நிலையை எட்டியிருப்பது இதுவே முதன்முறை.
புதன்கிழமை (செப்டம்பர் 25) பிற்பகல் 3.23 மணி நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு, 1.2839ஆக இருந்ததாக ‘யாஹூ ஃபைனான்ஸ்’ தரவு காட்டியது.
கடந்த சில மாதங்களாக சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு கூடி வந்துள்ளது. அதுவும் குறிப்பாக, கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்தது.
அண்மைய மாதங்களில், எதிர்பார்க்கப்பட்டதைவிட பலவீனமான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவு, அமெரிக்கப் பொருளியல் மெதுவடைவதைக் காட்டியது.
தொழிலாளர் சந்தை குறித்த கவலை காரணமாக, செப்டம்பரில் அமெரிக்கப் பயனீட்டாளர் நம்பிக்கை எதிர்பாராமல் குறைந்தது.