பெற்றோர் வீட்டுக்கு அருகில் வசிக்க விரும்பும் தம்பதியர்கள் பிடிஓ வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். தற்போது இந்தத் திட்டம் திருமணமாகாத ஒற்றையருக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
இதனால் பெற்றோர் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் ஒற்றையரின் கனவும் நனவாகிறது.
பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் இதனை அறிவித்தார்.
அது மட்டுமல்லாமல் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் மூத்தோருக்கான சமூகப் பராமரிப்பு வீடுகளுக்கும் அதிக மானியம் வழங்குவதையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
திரு லாரன்ஸ் வோங் பிரதமராக தமது முதல் தேசிய தினப் பேரணி உரையில் சிங்கப்பூரர்களின் முக்கிய கவலையான வீடமைப்பு பற்றியும் பேசினார்.
அப்போது, பொது வீடமைப்பு வீடுகள் அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையில் எளிதில் பெறும் வகையில் இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
தனிநபர்களின் வீட்டுக் கவலையைப் போக்க இன்னும் என்ன செய்ய முடியும் என்பதை ஆராயுமாறு தேசிய வளர்ச்சி அமைச்சிடம் தாம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
தற்போது, 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத தனிநபர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து புதிய வீட்டை வாங்க முடியும். ஆனால் ஈரறை ஃபிளக்சி வீடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
தொடர்புடைய செய்திகள்
தேவைகளைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ந்து புதிய வீடுகளை கட்டி விநியோகித்து வரும் நிலையில் இதில் பெரிய மாற்றங்களைச் செய்தால் அரசாங்கத்தின் முயற்சி சிரமமாகிவிடும்.
ஆனால் பெற்றோருக்கு அருகில் வசிக்க விரும்பும் தனிநபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை விரிவுபடுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய முன்னுரிமைத் திட்டங்களின்கீழ் குலுக்கல் முறையில் வீடுகளைப் பெற விண்ணப்பதாரர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும். உதாரணமாக, திருமணமான பிள்ளைகளுக்கான முன்னுரிமைத் திட்டம், நான்கு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தங்களுடைய பெற்றோரின் வீட்டுக்கு அருகே உள்ள வீடுகளுக்கு தம்பதிகள் விண்ணப்பிக்க முடியும்.
“இன்று திருமணமான பிள்ளைகளும் அவர்களுடைய பெற்றோரும் அருகருகே வசிக்க பிடிஓ வீடுகள் வாங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை எளிதாக்குவதற்காக இதனைச் செய்கிறோம். ஆனால் திருமணமானவர்களுக்கு மட்டும் என்று வரம்பு விதிக்கக்கூடாது,” என்று பிரதமர் லாரன்ஸ் வோங் மேலும் தெரிவித்தார்.;
“திருமணமாகாத பல தனிநபர்களும் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள அருகில் வசிக்க விரும்புகின்றனர். இதனால் முன்னுரிமைத் திட்டத்தை திருமணமான, திருமணமாகாத அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்படுகிறது,” என்றார் அவர்.
2025ஆம் ஆண்டின் மத்தியில் நடப்புக்கு வரும் இந்த மாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கைகள் பற்றிய அதிக விவரங்களை தேசிய வளர்ச்சி அமைச்சு பின்னர் வெளியிடும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.