மலேசிய வங்கியில் வர்த்தகக் கணக்குகள் திறக்க சிங்பாஸ் பயன்படுத்தலாம்

மலேசிய வங்கியில் வர்த்தகக் கணக்குகள் திறக்க சிங்பாஸ் பயன்படுத்தலாம்

மலேசியாவில் விரிவாக்கம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு உதவும் திட்டம்
படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

11 Jun 2026 - 5:20 pm

1 mins read

மலேசியாவில் உள்ள ஓசிபிசி வங்கியில் வர்த்தகக் கணக்குகளை (பிஸ்னஸ்) தொடங்க சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் சிங்பாஸ் மறைச்சொற்களைப் பயன்படுத்தலாம்.

இந்தப் புதிய செயல்முறையை ஓசிபிசி வங்கி வியாழக்கிழமை (ஜூன் 11) அறிவித்தது.

வழக்கமாக மூன்று வாரங்கள் எடுக்கும் மலேசிய வங்கியின் வர்த்தகக் கணக்குக்கான விண்ணப்பம் இப்புதிய சிங்பாஸ் முறையால் ஏறத்தாழ ஐந்து நாள்களுக்குக் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக வங்கி தெரிவித்தது.

மின்னிலக்கமாக அடையாளங்களை உறுதிசெய்து கொள்ளலாம் என்பதையும் வங்கி குறிப்பிட்டது.

சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட சிங்பாஸ் தீவைக் கடந்து வெளிநாட்டில் பயன்படுவது இதுவே முதன்முறையாகும்.

நிதி நிறுவனங்களில் தற்போது வர்த்தகக் கணக்குகளைத் தொடங்க நேரடியாக அங்கு சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.

சிங்கப்பூர்-மலேசியா வர்த்தகம்

இந்தப் புதிய ஏற்பாடு, சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வோருக்கு உரிய வசதியை வழங்கும் என்பதால் ஓசிபிசி வங்கி இதனை முன்னெடுத்துள்ளது.

சிங்கப்பூரில் சிறிய நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 விழுக்காடு ஏற்றமடைந்து வருகிறது எனவும் குறிப்பாக உணவு, பானத் துறையில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் ஓசிபிசி வங்கியின் வாடிக்கைகையாளர் தரவுகள் தெரிவிக்கின்றன.

எனவே ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் விரைவில் தொடங்கப்படும் நிலையில் இந்த ஏற்பாடு இங்குள்ள பல நிறுவனங்களுக்கு உதவியாக அமையும்.

குறிப்புச் சொற்கள்
வங்கிமலேசியாவர்த்தகம்கணக்குகள்சிங்பாஸ்