சிங்போஸ்ட் நிறுவனம், கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் $245.1 மில்லியன் நிகர லாபம் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.
ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் நிகர லாபத்தைவிட இது இருமடங்குக்குமேல் அதிகம்.
வழக்கமான வர்த்தக நடவடிக்கைகளால் அல்லாமல் ஒருமுறை மட்டும் இடம்பெற்ற நடவடிக்கை மூலம் ஈட்டப்பட்ட லாபம் இதற்குக் காரணம் என்று வியாழக்கிழமை (மே 15) வெளியிட்ட அறிக்கையில் நிறுவனம் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவில் செய்திருந்த முதலீடுகளை விற்பனை செய்ததை அது சுட்டியது.
சென்ற நிதியாண்டு முழுவதற்கும் இத்தகைய ஒருமுறை மட்டும் இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கை மூலம் சிங்போஸ்ட் $222.2 மில்லியன் லாபம் ஈட்டியது.
$302.1 மில்லியன் மதிப்பிலான சிங்போஸ்ட் ஆஸ்திரேலியா முதலீடுகளை விற்பனை செய்தது, சொத்துகளின் மதிப்பு வாங்கிய விலையைவிட அதிகரித்ததால் கிடைத்த $15.2 மில்லியன் லாபம் போன்றவற்றால் இது சாத்தியமானது.
ஆஸ்திரேலிய வர்த்தகத்தைக் கைமாற்றியதன் மூலம் கிடைத்த தொகை, கடனைக் குறைப்பதற்கும் பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகை வழங்குவதற்கும் எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டதாக நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ஒவ்வொரு பங்கிற்கும் சிறப்பு லாப ஈவுத்தொகையாக ஒன்பது காசு வழங்குவதற்காக 202.5 மில்லியன் வெள்ளியை ஒதுக்குவதற்கு நிறுவனத்தின் இயக்குநரவை பரிந்துரைத்துள்ளது.
சிங்போஸ்ட்டின் 33வது வருடாந்தரப் பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும். லாப ஈவுத் தொகையை வழங்கும் தேதியும் அதில் முடிவு செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஒருமுறை மட்டும் இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கையால் ஈட்டிய லாபத்தைத் தவிர்த்து, சிங்போஸ்ட் நிறுவனத்தின் சென்ற நிதியாண்டுக்கான நிகர லாபம் 40 விழுக்காட்டிற்குமேல் குறைந்து $24.8 மில்லியனாகப் பதிவானது.
சென்ற நிதியாண்டின் பிற்பாதியில் நிறுவனத்திற்கு $0.5 மில்லியன் நிகர இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஒப்பிடுகையில், அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தில் $28.1 மில்லியன் லாபம் பதிவானது.
இந்தச் சரிவு உலகளாவிய தளவாடத் துறையில் நிலவும் சவால்களையும் நிச்சயமற்ற சூழல்களையும் எடுத்துக்காட்டுவதாக சிங்போஸ்ட் கூறியது.