சிங்போஸ்ட் அதிகாரிகள் நீக்கப்பட்ட விவகாரம் நிறுவன ஆட்சிமுறை தொடர்பானது என்றும் அஞ்சல் சேவைகள் மீது தமது அமைச்சு அணுக்கமாகக் கவனம் செலுத்தி வருகிறது என்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
“அதிகாரிகள் நீக்கத்துக்கு இட்டுச் சென்ற சிங்போஸ்ட் விவகாரம், வெளிநாட்டுக்கான அனைத்துலக அஞ்சல்பரிமாற்று பொட்டல விநியோகம் என்ற அளவில் நின்றுவிட்ட ஒரு சம்பவம். அச்சம்பவத்தால் சிங்கப்பூரின் உள்நாட்டு அஞ்சல் சேவைகள் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) கூறினார்.
எச்சரிக்கை ஊட்டிய தகவல் ஒன்றின் அடிப்படையிலும் நிர்வாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தும் சிங்போஸ்ட்டின் மூன்று அதிகாரிகள் டிசம்பர் 21ஆம் தேதி நீக்கப்பட்டனர்.
சிங்போஸ்ட் வாடிக்கையாளர் ஒருவரின் இணைய வர்த்தக ஏற்றுமதித் தரவு ஒன்று பொய்யாகத் திருத்தப்பட்டது என அந்தத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில், சிங்போஸ்ட் குழும தலைமை நிர்வாகி வின்சென்ட் ஃபாங், குழும தலைமை நிதி அதிகாரி வின்சென்ட் யிக் மற்றும் நிறுவனத்தின் அனைத்துலக வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாகி லி யு ஆகியோர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.
அந்தச் சம்பவத்தின் அடிப்படையில், பாட்டாளிக் கட்சி செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் லூயிஸ் சுவா கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.
இதுபோன்று வேறு ஏதும் முரண்பாடான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதைக் கண்டறிய சிங்போஸ்ட்டில் மேற்கொண்டு ஆய்வு எதனையும் அரசாங்கம் நடத்துமா என்பது அவரது கேள்வி.
அதேபோல, பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுபாட், தகவல் மற்றும் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சிடம் கேள்வி ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் அஞ்சல் விநியோகங்களுக்கான குறியீடுகள் ஏதேனும் சூழ்ச்சித் திறத்துடன் கையாளப்பட்டது குறித்து அமைச்சுக்குத் தெரியுமா என்பது அவரது கேள்வி.
அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு டான், “அஞ்சல் சேவைப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று அரசாங்கத்திடம் சிங்போஸ்ட் இயக்குநரவை உறுதிபடத் தெரிவித்து உள்ளது,” என்றார்.

