சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) குழுமம் ஐசக் மா என்பவரை தனது குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமித்துள்ளது.
சென்ற மாதம் தலைமை நிதி அதிகாரி நீக்கப்பட்டதால் காலியான அந்தப் பதவியில் திரு மா நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிங்போஸ்ட்டின் அங்கமாக ஆஸ்திரேலியாவில் இயங்கும் ‘ஃபிரைட் மேனேஜ்மெண்ட் ஹோல்டிங்ஸி’ன் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிய அவரை தமது குழுமத்தில் இணைக்க இருப்பதாக 2024 டிசம்பரில் சிங்போஸ்ட் விருப்பம் தெரிவித்து இருந்தது.
41 வயதுான திரு மாவின் நியமனம் உடனடியாக நடப்புக்கு வருவதாக சிங்போஸ்ட் புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
சிங்போஸ்ட் குழுமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தலைமைச் செயலாக்க அதிகாரி என்னும் பதவியில் திருவாட்டி நியோ சு யின் என்பவர் நியமிக்கப்பட்ட ஒரு சில வாரங்களில் திரு மாவின் நியமனம் இடம்பெற்று உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சிங்போஸ்ட் தலைமைப் பொறுப்புகளில் இருந்து மூவர் நீக்கப்பட்டனர். குழுமத்தின் தலைமை நிர்வாகி வின்சென்ட் ஃபாங், தலைமை நிதி அதிகாரி வின்சென்ட் யிக், அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லி யு ஆகியோர் அவர்கள்.
வேலையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர உள்ளதாக அந்த மூவரும் அறிவித்து உள்ளனர்.