தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்த நிர்வாகிகள் மூவரைப் பதவிநீக்கம் செய்த சிங்போஸ்ட்

2 mins read
eea6a3e9-29d0-47eb-af11-6412f67bb672
பதவிநீக்கம் செய்யப்பட்ட (இடமிருந்து) சிங்போஸ்ட் நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி வின்செண்ட் பாங், குழுமத் தலைமை நிதி அதிகாரி வின்செண்ட் யிக், நிறுவனத்தின் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லீ யு. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம், பிஸ்னஸ் டைம்ஸ் கோப்புப்படம், சிங்போஸ்ட்

சிங்போஸ்ட் நிறுவனம் அதன் மூன்று மூத்த நிர்வாகிகளைப் பதவிநீக்கம் செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்படாத நடைமுறைகள், அதன் அனைத்துலக வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த மூன்று மேலாளர்களின் முறையற்ற செயல்பாடுகள், விதிமீறல்கள் குறித்து இவ்வாண்டு புகார் அளிக்கப்பட்டதாக சிங்போஸ்ட் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட மூன்று மேலாளர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக சிங்போஸ்ட் காவல்துறையிடம் புகார் அளித்தது.

அதுமட்டுமல்லாது, அந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகத்தின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய சட்ட நிறுவனம் ஒன்றை சிங்போஸ்ட் நியமித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முறையாகக் கையாளவில்லை என்பதற்காக சிங்போஸ்ட் நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி வின்செண்ட் பாங், குழுமத் தலைமை நிதி அதிகாரி வின்செண்ட் யிக், சிங்போஸ்ட்ட்டின் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாகி லீ யு ஆகியோர் டிசம்பர் 21ஆம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த மூவர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக சிங்போஸ்ட் கூறியது.

இந்நிலையில், புதிய குழுமத் தலைமை நிர்வாகி நியமிக்கப்படுவார் என்று சிங்போஸ்ட் அறிவித்துள்ளது.

சிங்போஸ்ட் நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வர்த்தகப் பிரிவின் தற்போதைய தலைமை நிதி அதிகாரியான திரு ஐசேக் மா புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்போஸ்ட்டின் அனைத்துலக வர்த்தகப் பிரிவுக்குத் தலைமை தாங்க தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பதவிநீக்கத்தை எதிர்க்கப்போவதாக சிங்போஸ்ட்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்செண்ட் பாங்கும் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வின்செண்ட் யிக்கும் தெரிவித்துள்ளனர்.

பணிநீக்கத்துக்காகக் கொடுக்கப்பட்ட காரணங்கள் அடிப்படையற்றவை என்று அவர்கள் கூறினர்.

நியாயமற்ற வகையில் தங்களைப் பணிநீக்கம் செய்துவிட்டதாக இருவரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறைகூறினர்.

கவனமின்மையுடன் செயல்பட்டது, முறையற்ற வகையில் நடந்துகொண்டது, பொய்த் தகவல் அளித்தது என எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம்,” என்று திரு பாங்கும் திரு யிக்கும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்