சிங்போஸ்ட் தனது ஆஸ்திரேலிய நிறுவனமான ஃபிரைட் மேனேஜ்மண்ட் ஹோல்டிங்சை (Freight Management Holdings: FMH), பசிபிக் இக்குவிட்டி பார்ட்னர்சிடம் (Pacific Equity Partners) 504.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (775.9 மி. ஆஸ்திரேலிய டாலர்) விற்கப் போவதாக திங்கட்கிழமையன்று (டிசம்பர் 2) தெரிவித்தது.
இந்த விற்பனையால் S$312.1 மில்லியன் ஆதாயம் கிடைக்கும் என சிங்போஸ்ட் எதிர்பார்க்கிறது.
கடந்த 2023 ஜூலையில் சிங்போஸ்ட் உத்திபூர்வ மதிப்பாய்வுகளைத் தொடங்கியது. இதையடுத்து அதன் ஆஸ்திரேலிய நிறுவனத்தை விற்பதற்கான பேச்சு தொடங்கியிருப்பதாக கடந்த வாரம் சிங்போஸ்ட் அறிவித்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய நிறுவனத்தை விற்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்போஸ்ட் தனது விற்பனையில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கடன்களைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது.
குறிப்பாக, 362.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன், எஃப்எம்எச் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்காக வாங்கப்பட்டது.
இதனுடன் சேர்த்து செப்டம்பர் 30 நிலவரப்படி சிங்போஸ்ட் குழுமத்துக்கு உள்ள மொத்த கடன் 614.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராகும்.
எஞ்சிய பணத்தை ஏற்கெனவே உள்ள அல்லது புதிய தொழில்கள், சொத்துகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்வது உள்ளிட்ட ‘எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளுக்கு’ பயன்படுத்தப்படும் என்று சிங்போஸ்ட் கூறியுள்ளது.