புதிய சுங்க விதிமுறைகள் நடப்புக்கு வரவுள்ள நிலையில், சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 16 நாடுகளுக்கான அனைத்து வர்த்தகச் சரக்குச் சேவைகளையும் வரும் நவம்பர் 1ஆம் தேதிமுதல் ‘டிலிவர்டு டியூட்டி பெய்டு’ (Delivered Duty Paid - DDP) எனும் கட்டமைப்புக்கு மாற்றவிருக்கிறது.
சரக்கு விநியோகத்தில் ஏற்படும் தாமதங்கள், எல்லைகளில் பொருள்கள் நிராகரிக்கப்படுவது, பெறுநர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் வரிக் கட்டணங்கள் ஆகியவற்றைக் குறைப்பதே அந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று சிங்கப்பூரின் தேசிய அஞ்சல் சேவை நிறுவனமான சிங்போஸ்ட் புதன்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்தது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 3 யூரோ (S$4.28) சுங்க வரி விதிப்பைத் தொடர்ந்து, அங்கு அனுப்பப்படும் குறைந்த மதிப்புடைய பொட்டலங்களின் எண்ணிக்கையில் தொடக்கத்தில் ஒரு பெரும் சரிவு ஏற்படக்கூடும் என்று சிங்போஸ்ட் எச்சரித்திருந்தது.
அமெரிக்கா 2025ஆம் ஆண்டில் தனது சுங்க வரி விலக்குச் சலுகையை ரத்து செய்தபோதும், அந்நாட்டிற்கு அனுப்பப்படும் பொட்டலங்களின் எண்ணிக்கையில் இதேபோன்ற வீழ்ச்சி ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் அனைத்துலக விவகாரங்கள், வர்த்தகப் பிரிவுக்கான துணைத் தலைவர் லீ ஹொன் சியூ கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.
இருப்பினும், புதிய இறக்குமதி வரிகளுக்கு ஏற்ப சரக்கு அனுப்புவோர் தங்களின் நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்ட பிறகு, அப்பொட்டலங்களின் எண்ணிக்கை படிப்படியாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது என்றும் அவர் தெரிவித்தார்.
