இவ்வாண்டு முதல் காலாண்டில் சிங்போஸ்ட் குழுமத்தின் செயல்பாட்டு லாபம்60 விழுக்காடு சரிந்ததுள்ளது.
ஆண்டு அடிப்படையில், அதன் செயல்பாட்டு லாபம் 8.4 மில்லியன் வெள்ளியிலிருந்து சரிந்து 3.4 மில்லியன் வெள்ளியாகப் பதிவாகியுள்ளது. சந்தையில் கூடுதலாகக் காணப்படும் நெருக்குதல்கள், போட்டித்தன்மை ஆகியவை அதற்குக் காரணங்கள் என்று சிங்போஸ்ட் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) தெரிவித்தது.
அதேபோல், சிங்போஸ்ட்டின் வருவாயும் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 23.8 விழுக்காடு குறைந்து 162.3 மில்லியன் வெள்ளியாகப் பதிவாகியுள்ளது. மற்ற நாடுகளுக்குப் பொருள்களை அனுப்பும் நடவடிக்கைகள் கணிசமான அளவு குறைந்தது அதற்குக் காரணம்.
இந்நிலையில், அதன் ஒட்டுமொத்த லாப விகிதம் இரண்டு விழுக்காட்டுக்குள் மட்டுமே அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்போஸ்ட் சென்ற ஆண்டு அதன் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் ஃபாங்கைப் பதவிநீக்கம் செய்தது. நிறுவனத்திற்குள் இடம்பெறக்கூடிய தவறான நடத்தை குறித்துப் புகாரளிக்கப்பட்டதை சரியாகக் கையாளததற்காக அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு சிங்போஸ்ட் இன்னும் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கவில்லை.

