இவ்வாரம் மூன்று நாள்களாக ஏற்பட்ட சேவைத் தடைக்கு சிங்டெல் தலைமை நிர்வாக அதிகாரி இங் டியென் சோங் வியாழக்கிழமை (மார்ச் 19) மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
மார்ச் மாதம் 16லிருந்து 18ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று நாள்களும் சிங்டெல் பயனர்கள் சேவைத் தடையை எதிர்நோக்கினர்.
“தொடர்பில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். இச்சம்பவங்கள் நமது வாடிக்கையாளர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்வோம். இது நடந்திருக்கக்கூடாது. நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
சிங்டெல்லின் கட்டமைப்பு நிலையங்கள் ஒன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாற்றால் மார்ச் 16ஆம் தேதி சுமார் 15 விழுக்காட்டு சிங்டெல் பயனர்கள் சேவைத் தடையை எதிர்கொண்டதாக திரு இங் குறிப்பிட்டார்.
அதேபோல் மார்ச் 17ஆம் தேதி, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப முறை மேம்பாட்டின் தொடர்பிலான மென்பொருள் கோளாறு காரணமாகக் கிட்டத்தட்ட 2,000 பயனர்களின் சேவைகளுக்கு தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18ஆம் தேதி ஒரே நேரத்தில் அதிகமானோர் சிங்டெல் கட்டமைப்பைப் பயன்படுத்தியதால் இடையூறு ஏற்பட்டதாகவும் சுமார் ஒரு மணிநேரத்துக்குள் அப்பிரச்சினை சரிசெய்யப்பட்டதாகவும் திரு இங் தெரிவித்தார்.
அனைத்துப் பிரச்சினைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்று அவர் கூறினார்.
சிங்டெல் சேவைத் தடைகளால் ஒட்டுமொத்தமாக சுமார் 600,000 பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

