சிங்டெல் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் 2025 நிதியாண்டில் 16 விழுக்காட்டுக்கு மேல் கூடியுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2024 நிதியாண்டு வழங்கப்பட்டதுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் திரு யுவென் குவான் மூனின் மொத்த சம்பளம் 8.2 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது. 2025 நிதியாண்டு கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த நிதியாண்டில் சிங்டெல் குழுமம் சிறப்பாகச் செய்ததையொட்டி தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் அதிகரித்துள்ளது.
2024 நிதியாண்டில் திரு யுவெனின் சம்பளம் ஏழு மில்லியன் வெள்ளியாக இருந்தது.
சிங்டெல்லின் ஒட்டுமொத்த லாபம் 400 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்து 4.02 பில்லியனாகப் பதிவானது. ஓராண்டுக்கு முன்பு அத்தொகை 795 மில்லியனாக இருந்தது.
தங்கள் தலைமையகமாக விளங்கிய காம்சென்டர் (Comcentre) கட்டடத்தில் தங்களுக்கு இருந்த பங்கில் ஒரு பகுதியை விற்றதன் மூலம் சிங்டெல் 1.3 பில்லியன் வெள்ளி ஈட்டியது. அது, அக்குழுமத்தின் ஒட்டுமொத்த லாபத்துக்கு மெருகூட்டியது.
லெண்ட்லீஸ் நிறுவனத்துடன் சேர்ந்து காம்சென்டரை மேம்படுத்த சிங்டெல் திட்டமிட்டுள்ளது. அத்திட்டம் முதலில் 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.