சிங்டெல் குழுமம் இந்தியாவின் பார்தி ஏர்டெல்லில் வைத்திருந்த பங்குகளில் 0.8 விழுக்காட்டை விற்றுள்ளது.
அதனால், பார்தி ஏர்டெல்லில் சிங்டெல்லின் பங்கு 28.3 விழுக்காட்டில் இருந்து 27.5 விழுக்காடாகக் குறைந்தது.
இந்தப் பங்கு விற்பனை மூலம் சிங்டெல்லுக்கு S$1.1 பில்லியன் லாபம் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) வர்த்தகத்தின்போது ஒரு பங்கின் விலை 2,030 ரூபாய் (S$29.88) என்ற விகிதத்தில் 51 மில்லியன் பங்குகளை சிங்டெல் விற்றுள்ளது. பேஸ்டல் (Pastel) எனப்படும் தனது மறைமுகத் துணை நிறுவனம் மூலம் அவற்றை அது விற்பனை செய்துள்ளது.
இந்த விற்பனை விலை, வியாழக்கிழமை (நவம்பர் 6) வர்த்தக முடிவில் பதிவான ஏர்டெல் பங்கின் விலையைக் (2,094.90 ரூபாய்) காட்டிலும் 3.1 விழுக்காடு குறைவு.
இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தனக்கு இருக்கும் பங்கை சிங்டெல் குறைத்து இருப்பது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை.
கடந்த மே மாதம் தனது ஏர்டெல் பங்குகளில் 1.2 விழுக்காட்டை அந்தக் குழுமம் விற்றது.
இதற்கு முன்னர், கடந்த 2022ஆம் ஆண்டும் 2024ஆம் ஆண்டும் ஏர்டெல் பங்குகளை விற்றதன் மூலம் S$3.5 பில்லியன் லாபத்தை சிங்டெல் பதிவு செய்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆக அண்மைய பரிவர்த்தனை மூலம் S$1.1 பில்லியன் லாபம் கிடைக்கும் என சிங்டெல் மதிப்பிட்டுள்ளது. இது ஏர்டெல் நிறுவனப் பங்குகளுக்கான தேவை வலுவாக உள்ளதைக் காட்டுவதாகவும் சிங்டெல் குறிப்பிட்டுள்ளது.
இந்த விற்பனைக்குப் பின்னர் ஏர்டெல்லில் S$51 பில்லியன் மதிப்புடைய பங்குகளை சிங்டெல் குழுமம் வைத்துள்ளதாகக் கணக்கிடப்படுகிறது.
சிங்கப்பூர் பங்குச் சந்தையில் சிங்டெல்லின் பங்குகள் வெள்ளிக்கிழமை 3.1 விழுக்காடு வரை உயர்ந்தன. அதன் காரணமாக, பிற்பகல் 2.15 மணியளவில் ஒரு பங்கின் விலை 14 காசு அதிகரித்து S$4.64 என வர்த்தகம் ஆனது.

