தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்டெல் ஆள்மாறாட்டக் குறுஞ்செய்தி மோசடியில் $100,000மேல் இழப்பு

1 mins read
b93e91b4-73e6-437d-adcb-27d898a31941
சித்திரிப்பு: - பிக்சாபே

சிங்டெல் ஆள்மாறாட்டக் குறுஞ்செய்தி மோசடியில் ஒரு வாரத்திற்குள் ஏறக்குறைய $100,000 இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை செப்டம்பர் 7ஆம் தேதி தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி முதல் இந்த மோசடி தொடர்பில் 14 புகார்கள் வந்ததாக அது கூறியது.

பாதிக்கப்பட்டோர், காலாவதியாகும் சிங்டெல் புள்ளிகள் குறித்த குறுஞ்செய்தியைப் பெற்றனர். மோசடி இணையத்தளத்திற்கான இணைப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

அங்குத் தங்களுக்கு வேண்டிய பரிசுப்பொருள்களைத் தெரிவுசெய்யும்படியும் கடன்பற்று அட்டை அல்லது ரொக்கக் கழிவு அட்டை விவரங்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மறைச்சொல் ஆகியவற்றைப் பதியும்படியும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

வங்கிகள் தகவல் அளித்த பிறகே தங்கள் அனுமதியின்றிப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதை அவர்கள் தெரிந்துகொண்டனர்.

இத்தகைய மோசடிகளிலிருந்து காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படிப் பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.

வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளைத் தடை செய்தல், அங்கீகரிக்கப்பட்ட வங்கிச் செயலிகளை மட்டும் பயன்படுத்துதல், வங்கிச் செயலிகள், சமூக ஊடகம், சிங்பாஸ் கணக்குகளுக்கு இரண்டு விதமான அனுமதி ஒப்புதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தும்படி அது ஆலோசனை கூறியது.

‘பேநவ்’, ‘பேலா’ உட்பட, வங்கிகளில் இணையம் வழியான பணப் பரிவர்த்தனைகளுக்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கும்படியும் அது பரிந்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்