சிங்டெல் தொலைபேசிச் சேவையில் அக்டோபர் 8ஆம் தேதி ஏற்பட்ட தடங்கலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
அந்தச் சேவைத் தடை மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இரவு ஏழு மணிவாக்கில், சேவைகள் கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்பத் தொடங்கின.
பாதிப்படைந்த அரசாங்கச் சேவை தொலைபேசி எண்களில் சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் அவசரத் தொலைபேசிச் சேவை எண்களும் அடங்கும்.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, சிம்ப்ளிகோ ஆகியவற்றின் தொலைபேசிச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
பிற்பகல் 3.18 மணி நிலவரப்படி, ‘டௌன்டிடெக்டர்’ எனப்படும் சேவைத் தடங்கல் தொடர்பான இணையத்தளத்தில் 2,706 புகார்கள் செய்யப்பட்டன.
மாலை 4.20 மணி அளவில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், குறுஞ்செய்தி மூலம் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சிங்கப்பூர் காவல்துறையும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டன.
“பொதுமக்களின் பாதுகாப்பும் நலனுமே நமது முன்னுரிமை. தகவல் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக விவரங்களை வழங்குவோம்,” என்று காவல்துறை முன்னதாகக் கூறியிருந்தது.
இரவு 7 மணிவாக்கில், ‘999’, ‘995’ தொலைபேசிச் சேவைகள் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவசரச் சேவையைத் தொடர்புகொள்வதில் ஏற்பட்ட தாமதத்தால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.