சிங்டெல் கைப்பேசி இணைப்பில் இடையூறு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தால் கைப்பேசியை அணைத்து அதை மீண்டும் செயல்படுத்துமாறு பாதிக்கப்பட்டோர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தங்கள் பயனர்கள் சிலரின் கைப்பேசி இணைப்பு சீராக இல்லை என்று வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) சிங்டெல் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கைப்பேசியை அணைத்து மீண்டும் செயல்படுத்துமாறும் அப்பதிவில் சிங்டெல் கேட்டுக்கொண்டது.
அவ்வாறு செய்ததையடுத்து பிரச்சினை தீர்ந்ததாக அப்பதிவில் பயனர்கள் சிலர் தெரிவித்தனர். இணைப்பில் இடையூறு ஏற்பட்டதற்கு சிங்டெல் மன்னிப்புக் கேடடுக்கொண்டது.
இணைப்பு, இணையச் சேவைகளில் இடையூறு ஏற்படுவதைக் கணக்கிடும் டவுன்டிட்டெக்டர் (DownDetector) தளத்தில் கைப்பேசிச் சேவையில் இடையூறு ஏற்பட்டதாக சிங்டெல் பயனர்கள் பலர் பதிவிட்டனர். வியாழக்கிழமை காலை சுமார் ஐந்து மணியிலிருந்து பலர் பதிவிட்டு வந்தனர்.
காலை 10.45 மணி நிலவரப்படி 900க்கும் மேற்பட்டோர் இணைப்பில் இடையூறு ஏற்பட்டதாகப் பதிவிட்டிருந்தனர்.
கைப்பேசியைப் பயன்படுத்த வகைசெய்யும் இணைப்பு இல்லை என்பதே டவுன்டிட்டெக்டர் தளத்தில் பதிவிட்ட பெரும்பாலோரின் குறையாக இருந்தது. பொதுவாகவே இணையச் சேவையில் இடையூறுகளைச் சந்தித்ததாகவும் சிலர் பதிவிட்டனர்.