இம்மாதம் 16லிருந்து 18ஆம் தேதிக்கு இடைப்பட்ட மூன்று நாள்களில் சிங்டெல் தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் தொடர்ந்து சேவைத் தடை ஏற்பட்டது.
அதுகுறித்து தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) விசாரணை நடத்தத் தொடங்கிவிட்டது.
“இதுபோன்ற சேவைத் தடைகளை ஐஎம்டிஏ அதிக கவனத்துடன் கருத்தில்கொள்ளும். நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிங்டெல் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்,” என்று தொலைத்தொடர்புத் துறையை நிர்வகிக்கும் அமைப்பான ஐஎம்டிஏ வியாழக்கிழமை (மார்ச் 19) தெரிவித்தது.
தொடர்ந்து மூன்று நாள்களாக சிங்டெல் கட்டமைப்பைப் பயன்படுத்த முயன்றபோது பயனர்கள் இடையூறுகளை எதிர்நோக்கினர்.
முதலில் மார்ச் மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட சிங்டெல் சேவைத் தடை எட்டு மணிநேரம் நீடித்தது. அதனால் கட்டண, உணவு விநியோகச் சேவைகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
பிறகு இரண்டாம் நாளான 17ஆம் தேதியும் சேவைத் தடை ஏற்பட்டது. சில பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இரு நாள்களில் மொத்தம் 30 மணிநேரத்துக்கு மேல் சேவைத் தடை ஏற்பட்டது.
அவ்விரு நாள்களிலும் ஏற்பட்ட சேவைத் தடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்றும் அவற்றுக்கு இணையத் தாக்குதல் காரணம் அல்ல என்றும் சிங்டெல் தெரிவித்திருந்தது.
பின்னர் மார்ச் 18ஆம் தேதி மாலை, சில சிங்டெல் பயனர்கள் மறுபடியும் சேவைத் தடையை எதிர்நோக்கினர். சேவைத் தடைச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்தது, அவற்றைக் கணக்கிடும் தளமான டெளன்டிடெக்டரில் தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 18ல் நிகழ்ந்த சேவைத் தடைக்கு இணையக் கட்டமைப்புக் கோளாறு காரணம் அல்ல என்றும் ஒரே நேரத்தில் பலர் சேவையைப் பயன்படுத்தியதே காரணம் என்றும் ஊடகங்களின் கேள்விகளுக்கு சிங்டெல் பதிலளித்தது.
அந்த மூன்று நாள்களில் ஏற்பட்ட சேவைத் தடைகள் குறித்து தாங்கள் விசாரணை நடத்தப்போவதாக ஐஎம்டிஏ வியாழக்கிழமை கூறியது. கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அது குறிப்பிட்டது.
சேவைத் தடைகளுக்கான காரணங்கள், பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் இன்னமும் தெரியவில்லை.
இதற்கு முன்பு கடைசியாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் சிங்டெல் கைப்பேசி சேவைத் தடை ஏற்பட்டது. அது ஆறு மணிநேரத்துக்கு மேல் நீடித்தது.

