சிங்கப்பூரின் பிரதான தொலைத் தொடர்பு நிறுவனமான சிங்டெல், புதிய செயற்கை நுண்ணறிவு மேகக்கணினிச் சேவையை (AI Cloud) தொடங்கியிருக்கிறது.
இச்சேவையை பாதுகாப்பான மேகக் கணினிச் சேவை தேவைப்படும் வங்கிகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பொதுச்சேவை உள்ளிட்ட துறைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்இ:ஏஐ (RE:AI) எனும் புதிய சேவையை வியாழக்கிழமை (அக்டோபர் 10) தனது ஜார்ஜ் ஸ்திரீட் அலுவலகத்தில் சிங்டெல் தொடங்கியது.
இதையொட்டி கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, ஏஐ தொழில் முனைப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்டெல் டிஜிட்டல் இன்ஃபிராகோ பிரிவின் தலைமை நிர்வாகியான பில் சாங், “செயற்கை நுண்ணறிவு வன்பொருளை சிங்கப்பூருக்குக் கொண்டு வரும் மற்ற மேகக்கணினிச் சேவை நிறுவனங்களைப் போலல்லாமல் உள்ளூர் சந்தையை நோக்கமாகக் கொண்ட உள்ளூரில் வளர்ந்த நிறுவனம் என்ற நன்மையை சிங்டெல் பெற்றுள்ளது என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
வங்கிகள், சுகாதாரப் பராமரிப்பு போன்ற உணர்வுபூர்வமாக பாதிக்கும் தகவல்களைக் கொண்ட நிறுவனங்கள் உள்ளூரிலேயே தரவுகளைச் செயல்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.