வியட்னாம் கடலோரத்தில் மூழ்கிய சரக்குக் கப்பலின் 18 பணியாளர்களும் மீட்கப்பட்டதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் சனிக்கிழமையன்று (ஜனவரி 11)தெரிவித்தது.
வியட்னாமில் பதிவு செய்யப்பட்ட ‘டால்பின் 18’ (Dolphin 18) எனும் சரக்குக் கப்பலிலிருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட கொள்கலக் கப்பலான ‘நிக்கோலாய் மார்ஸ்க்’ (Nicolai Maersk) ஜனவரி 11ஆம் தேதி காலை 7 மணியளவில் கடல்துறை மீட்டு ஒருங்கிணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
“மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக கடல்துறை மீட்டு ஒருங்கிணைப்பு நிலையம் மேற்கொண்டது. ‘டால்பின் 18’ கப்பலின் வழித்தடத்தில் சென்ற அனைத்து கப்பல்களுக்கும் இதுதொடர்பான தகவல் வழங்கப்பட்டது. மேலும், அக்கப்பலைப் பார்த்தவுடன் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டது. வியட்னாம் கடல்துறைக்கும் செய்தி அனுப்பப்பட்டது,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கொள்கலக் கப்பலான ‘நிக்கோலாய் மார்ஸ்க்’ (Nicolai Maersk) சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்துசென்று பாதிக்கப்பட்ட கப்பலின் பணியாளர்களைப் பாதுகாப்பாக மீட்டது என ஆணையம் சொன்னது.

