போர்க்காலத்தில் பிரிந்த அக்கா தங்கை; 90 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தது குடும்பம்

இரண்டு குடும்பங்களையும் ஒன்றுசேர்த்து உறவுப்பாலங்களை அமைத்தது சமூக ஊடகம்

போர்க்காலத்தில் பிரிந்த அக்கா தங்கை; 90 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தது குடும்பம்

5 mins read
9d6b6650-be65-44b2-985a-defdc1f01173
சிறு வயதில் தங்கையைப் பிரிந்து வளர்ந்த சாந்தகுமாரி கனகசபைக்குத் தற்போது 93 வயது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்த அவரது தங்கை தையல்நாயகியின் பிள்ளை, பேரப்பிள்ளைகளைச் சாந்தகுமாரி முதன்முறையாகப் புதன்கிழமை (பிப்ரவரி 18) சந்தித்தார்.  - படம்: செய்யது இப்ராகிம்

சீனப் புத்தாண்டையொட்டிச் சீன இனத்தவர்கள் குடும்பத்தோடு விருந்துக்காக இணைவர். இவ்வாண்டு இதே காலகட்டத்தில், ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குமேல் பிரிந்திருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று மீண்டும் இணைந்துள்ளது.

இதற்குக் காரணம் சமூக ஊடகம்.

93 வயது சாந்தகுமாரி கனகசபையின் பிறந்தநாள் கொண்டாட்டக் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. சிறுவயதில் பிரிந்த தங்கையின் குடும்பத்தினரை அவருடன் ஒன்றுசேர்த்தது அந்தக் காணொளி.

திருவாட்டி சாந்தகுமாரியின் தங்கை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வயிற்றுப் புற்றுநோயால் காலமானார். அந்தத் தங்கையின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அவர் புதன்கிழமை (பிப்ரவரி 18) முதன்முறையாகச் சந்தித்தார்.

எட்டுப் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் எனச் சாந்தகுமாரி தம் குடும்பத்தில் ஐந்து தலைமுறைகளைக் கண்டவர்.

அவருடன் நெருக்கமாக இருக்கும் அவரது பேத்தியான 45 வயது தமிழாசிரியர் விக்னேஸ்வரி ரெத்தினம், அடிக்கடி தமது பாட்டியைப் படம் அல்லது காணொளி எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு மகிழ்வார்.

அவ்வாறு விக்னேஸ்வரி பதிவேற்றம் செய்த தமது பாட்டியின் ரீல் காணொளி சமூக ஊடகங்களில் பரவி, முடிவில் ஏஞ்சல் குணாளன் என்பவரின் கவனத்தை எட்டியது. விக்னேஸ்வரியை அணுக ஏஞ்சல் முடிவு செய்தார்.

1984ல் சிறுமியாக இருந்த விக்னேஸ்வரியுடன் பாட்டி சாந்தகுமாரி.
1984ல் சிறுமியாக இருந்த விக்னேஸ்வரியுடன் பாட்டி சாந்தகுமாரி. - படம் விக்னேஸ்வரி ரெத்தினம்

சமூக ஊடகங்கள் வழியாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை வழக்கமாகக் கவனிக்காத விக்னேஸ்வரிக்கு, ஏஞ்சலின் குறுஞ்செய்திகளைப் படிக்கும் ஆர்வம் திடீரென உண்டானது.

“உங்கள் பாட்டி, என் பாட்டியைப் போலவே இருக்கிறார்,” என்ற குறுஞ்செய்தியை ஏஞ்சல் தமக்கு அனுப்பியிருந்ததாக விக்னேஸ்வரி கூறினார்.

“இது வழக்கமாகப் பலர் சொல்வதுதானே என எண்ணி, இதனை நான் முதலில் சாதாரணமாகக் கருதினேன். நாங்கள் தொடர்ந்து எங்கள் பாட்டிகளையும் குடும்பங்களையும் பற்றிப் பகிர்ந்தபோது, வியக்கத்தகு ஒற்றுமைகள் சில ஒவ்வொன்றாக வெளிப்பட்டன,” என்றார் விக்னேஸ்வரி.

பாட்டியின் பெயர் தையல்நாயகி கனகசபை என ஏஞ்சல் சொல்லியதும் விக்னேஸ்வரி ஆச்சரியத்தில் திடுக்கிட்டார்.

பிள்ளைப் பருவத்தில் பிரிந்து வளர்ந்த அக்கா சாந்தகுமாரி கனகசபை (இடது), தங்கை தையல்நாயகி கனகசபை. 
பிள்ளைப் பருவத்தில் பிரிந்து வளர்ந்த அக்கா சாந்தகுமாரி கனகசபை (இடது), தங்கை தையல்நாயகி கனகசபை.  - படங்கள்: விக்னேஸ்வரி ரெத்தினம், ஏஞ்சல் குணாளன்

“இந்தப் பெயரை ஏஞ்சல் என்னிடம் கூறியபோது, உடனே நான் என் தாயாரிடம் விசாரித்தேன். அப்போது, தையல்நாயகி என்றொரு தங்கை என் தாய்வழிப் பாட்டிக்கு (சாந்தகுமாரிக்கு) இருப்பதாக என் தாயார் கூறினார்.”

“தையல்நாயகிக்குக் கஸ்தூரிபாய் என்ற மகளும் இருந்ததாக என் தாயார் கூறியதை ஏஞ்சலிடம் தெரிவித்தேன். அந்தக் கஸ்தூரிபாய் என்பவர் தம் அத்தைதான் (தந்தையின் அக்கா) என ஏஞ்சல் சொல்லியபோது உண்மை உறுதியானது,” என்றார் விக்னேஸ்வரி.

சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளான புதன்கிழமை (பிப்ரவரி 18), இரண்டு குடும்பத்தினரும் முதல் முறையாக, லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள உணவகம் ஒன்றில் சந்தித்தனர். அந்த உணவகத்தில் செய்தியாளர்களும் காத்திருந்தனர்.

பாட்டியின் தங்கைக் குடும்பத்தினரை முதன்முறையாகக் காணப்போகும் ஆவலும் பயமும் கலந்திருந்ததை விக்னேஸ்வரி உணர்ந்தார்.

நண்பகல் வாக்கில் இரு குடும்பங்களும் சந்தித்துக்கொண்டன. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அவர்களது வாழ்க்கைத் துணைகள் எனக் காலஞ்சென்ற பாட்டி தையல்நாயகியைப் பிரதிநிதித்து எட்டுப் பேர் வந்திருந்தனர்.

உறவுப்பாலங்களை அமைத்தது சமூக ஊடகம். ரத்த உறவுகள் புத்துணர்ச்சி பெற்றனர்.
உறவுப்பாலங்களை அமைத்தது சமூக ஊடகம். ரத்த உறவுகள் புத்துணர்ச்சி பெற்றனர். - படம்: செய்யது இப்ராகிம்

தாயார் மீண்டும் கிடைத்தார்

இத்தகைய ஓர் ஒன்றுகூடல் சாத்தியமாகும் என நினைக்கவே இல்லை என்று இரண்டு தரப்பினரும் கூறினர்.

மறைந்த தையல்நாயகியின் மகளான 55 வயது கஸ்தூரிபாய், பேத்திகள் ஆகியோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

இறந்த தாயாருக்காகப் பலநாள் ஏங்கி, அழுது, மன அழுத்தத்திற்கு ஆளான கஸ்தூரிபாய், திருவாட்டி சாந்தகுமாரியைப் பார்த்ததும் மீண்டும் தமது பாசமிகுந்த தாயாரே திரும்பக் கிடைத்ததுபோல இருந்ததாக உருக்கத்துடன் கூறினார்.

“சாந்தகுமாரி என்ற ஓர் அக்கா தமக்கு இருந்ததாக என் தாயார் கூறியுள்ளார். இணையம் வழி கிடைத்த படத்தில் இருந்தவர் சாந்தகுமாரி எனக் கேள்வியுற்றதும், அவர் யார் எனத் தெரிந்துகொண்டேன்.

“உயிர் நீத்த என் தாயார், கடைசி வரை தன் அக்காவைக் காண ஆசைப்பட்டார்,” என்றார் திருவாட்டி கஸ்தூரிபாய். “அந்த ஆசை நிறைவேறாமல் போனது. ஆனாலும் இறைவன் எனக்கு என் அம்மாவைத் திருப்பித் தந்ததாகவே இப்போது எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக தாயாரின் மறைவை எண்ணி வருந்திய திருவாட்டி கஸ்தூரிபாய், இப்போது புதிய உறவுகள் கிடைத்ததை எண்ணி நெகிழ்கிறார்.

1935ல் பிறந்த தையல்நாயகியின் முதல் பேத்தியான ஏஞ்சல், பாட்டியைப் பற்றிய சிறுவயது நினைவுகள் இன்றுவரையிலும் தம் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

பாட்டி தையல்நாயகியுடன் குழந்தை ஏஞ்சலா
பாட்டி தையல்நாயகியுடன் குழந்தை ஏஞ்சலா - படம்: ஏஞ்சல் குணாளன்

“என் பாட்டி எல்லோருடனும் இனிமையாகப் பழகுவார். பாட்டுப் பாடுவார், நடனமாடுவார். எங்கள் குடும்பத்தை ஒன்றிணைக்கும் அச்சாணியாகத் திகழ்ந்தவர் அவர். அவரது பிரிவு எங்களைத் தாளமுடியாத வேதனையில் ஆழ்த்தியது,” என்றார் ஏஞ்சல். இப்போது தன் பாட்டியின் சகோதரியைக் காணும்போது சொல்ல இயலாத மகிழ்ச்சியை உணர்வதாக அவர் கண்ணீர் மல்கச் சொன்னார்.

கடந்தகால நினைவுகள்

நெடுநாளாகப் பிரிந்திருந்த தங்கை எங்குத் தங்கினார், என்ன செய்தார் என்று பல்லாண்டுகளாகத் தெரியாமல் இருந்ததாகத் திருவாட்டி சாந்தகுமாரி குறிப்பிட்டார்.

தமக்குத் தங்கை மட்டுமன்றி அண்ணன் ஒருவர் இருந்ததாகவும், ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் ரயில் கட்டுமானப் பணிகளுக்காகத் தாய்லாந்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த அண்ணன், பாம்புக்கடியால் இறந்ததாகவும் அவர் சொன்னார்.

“ஜப்பானியர் ஆட்சியின்போது என் தாயார் நோய்வாய்ப்பட்டு, பாட்டி வீட்டில் இறந்தார். நானும் என் தங்கையும் பாட்டி வீட்டில் இருந்தோம். பின்னர் என் அப்பா என்னை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, என் தங்கையைப் பாட்டியின் வீட்டிலேயே விட்டுச் சென்றார்,” என்றார் சாந்தகுமாரி.

“வேலைக்குச் செல்லும் தந்தைக்குப் பெரிய பிள்ளையான என்னை மட்டும் பார்த்துக்கொள்ள முடிந்ததாக அவர் என் பாட்டியிடம் கூறினார். முதலில் என்னை அழைத்துச் சென்ற பிறகு தங்கையை அழைத்துக்கொள்ளவிருப்பதாகத் தந்தை சொன்னார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தங்கையை எங்கள் சின்னம்மா வளர்த்தார். எங்கள் தொடர்பு விட்டுப்போனது,” என்று அவர் கூறினார்.

ஒன்பது வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்ட அவர், பிறந்த குடும்பத்தைவிட்டுப் பிரிந்தே வளர்ந்தார். “எங்கள் பெற்றோரின் மூன்று பிள்ளைகளில் இப்போது நான் மட்டும் உயிரோடு உள்ளேன்,” என்றார் சாந்தகுமாரி.

புதிய பந்தம் அமைத்துக்கொள்ளும் ரத்த உறவுகள்.
புதிய பந்தம் அமைத்துக்கொள்ளும் ரத்த உறவுகள். - படம்: செய்யது இப்ராகிம்

மலேசியாவுக்குச் செல்லும் வழியில் தங்கையை ஒருமுறை சந்தித்த நினைவு இருப்பதாகத் தமது பாட்டி கூறியதை விக்னேஸ்வரி சுட்டினார். ஏதேனும் உள்ளுணர்வு தம் பாட்டிக்கு அதனை உணர்த்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அன்பான மனித உறவுகளுக்கு அபார ஆற்றல் உள்ளது என்பதைத் தங்கள் குடும்பக் கதையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அனைவரும் உணரவேண்டும் என விரும்புவதாக விக்னேஸ்வரி கூறினார்.

என் பாட்டிக்காக நான் செய்த குறுங்காணொளி, 90 ஆண்டுகள் பிரிந்திருந்த எங்கள் குடும்பங்களை ஒன்றிணைத்தது. எங்கள் அனைவரின் கற்பனையைக் கடந்த ஒன்று நடந்துள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்