சிங்கப்பூரின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, ஆறு புதுமுகங்களை, தனது ஆக உயரிய முடிவெடுக்கும் குழுவில் நியமித்துள்ளது.
இந்த மாற்றம் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 20) நடந்தது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிப்போரிடையே பெரிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ள 12 பொறுப்புகளுக்கு 24 பேர் போட்டியிட்டனர்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களான லியோங் மன் வாய், ஹேசல் புவா இருவரும் மீண்டும் மத்திய செயற்குழுவில் இடம்பெறுகின்றனர். கட்சித் தலைவர் டான் செங் போக், அ’பாஸ் கஸ்மானி, வெண்டி லோ, ஃபாங் இயூ ஹுவாட் ஆகியோரும் குழுவில் தொடர்கின்றனர்.
புதுமுகங்கள் அறுவரும் குழுவுக்குத் தேர்வு பெற்றனர். அந்த அறுவர், சேமுவெல் லிம், 29; ஆன்டனி நியோ, 57; எஸ். நல்லக்கருப்பன், 60; சோ செங் லோங், 36; ஜானத்தன் டீ, 50; ஜோசஃப் வோங், 68 ஆகியோர் ஆவர்.
முன்னதாக மத்திய செயற்குழுவில் இருந்த எட்டுப் பேர் மீண்டும் தேர்ந்தேடுக்கப்படவில்லை.
புதிய மத்திய செயற்குழுவினரை 90 கட்சித் தொண்டர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் மேலும் இருவர் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அதனையடுத்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் மத்திய செயற்குழுவில் 14 உறுப்பினர்கள் இருப்பர்.
புதிய மத்திய செயற்குழுவில், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஈராண்டு காலத்துக்குப் பொறுப்பு வகிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
புதிய தலைமைச் செயலாளர் உள்ளிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்புகளை யார் யார் வகிக்கவிருக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று திரு லியோங், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மத்திய செயற்குழு வாக்களிப்பு முடிவடைந்ததும், புக்கிட் தீமா கடைத்தொகுதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்திலிருந்து திரு லியோங் வெளியேறியது காணப்பட்டது.

