‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் விரிவாக்கம்

‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் விரிவாக்கம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2026 - 6:52 pm

2 mins read

எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் திறன்களையும் லட்சியங்களையும் வளர்க்க உதவும் ‘கிஃப்ட்-எ-ஃபேமிலி’ (ஜிஏஎஃப்) திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (நவம்பர் 11) தெரிவித்துள்ளார்.

அத்தகைய குடும்பங்கள் நிலைத்தன்மையை பெறுவதற்கு அப்பால், சுயசார்பையும் சமூக முன்னேற்றத்தையும் அடைய உதவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் தேசிய ‘காம்லிங்க் பிளஸ்’ (ComLink+) ஆதரவுத் திட்டத்திற்குத் துணைபுரியும் ‘ஜிஏஎஃப்’ திட்டம், 2022ஆம் ஆண்டில் பூன் லேயில் முன்னோட்டத் திட்டமாகத் தொடங்கப்பட்டது.

பின்னர் கிளமெண்டி, ஜூரோங் ஈஸ்ட், புக்கிட் மேரா, குவின்ஸ்டவுன், தெம்பனிஸ் ஆகிய பகுதிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது.

வரும் மாதங்களில் ஹொங் கா நார்த், மார்சிலிங், நன்யாங், நீ சூன் லிங்க், பாய லேபார், பொங்கோல் நார்த், தோ பாயோ சென்ட்ரல் ஆகிய மேலும் ஏழு பகுதிகள் அத்திட்டத்தில் இணையவுள்ளன.

‘காம்லிங்க் பிளஸ்’ மற்றும் சமூகச் சேவை அலுவலகங்களின் ஆதரவு பெறும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தகுதியுள்ள குடும்பங்களை 2028ஆம் ஆண்டுக்குள் ‘கிஃப்ட்-எ-ஃபேமிலி’ திட்டத்தின்கீழ் கொண்டுவருவது இலக்காகும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அத்திட்டத்தை விரிவுபடுத்த தேசியச் சமூகச் சேவை மன்றத்துடனும் மக்கள் கழகத்துடனும் இணைந்து அமைச்சு செயல்பட உள்ளது.

தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் நன்கொடைப் பிரிவான சமூக உண்டியல், 2026 முதல் 2028 வரை ஒவ்வோர் ஆண்டும் முதற்கட்ட தொகையாக 100,000 வெள்ளி வழங்கும். மொத்தம் $ 4.2 மில்லியன் முதற்கட்ட நிதியாக வழங்கப்படவுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய அளவிலான ஆதரவுத் திட்டங்களும், அறநிறுவனங்கள், சமூகச் சேவை அமைப்புகளின் பணிகளும் குடும்பங்கள் நிலைத்தன்மையை அடைய உதவுகின்றன. ‘கிஃப்ட்-எ-ஃபேமிலி’ திட்டம் அதற்கும் மேலாகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் திரு லீ தெரிவித்தார்.

இத்திட்டம் குடும்பங்களைத் தனிப்பட்ட நன்கொடையாளர்களுடனும் வழிகாட்டிகளுடனும் இணைக்கிறது என்றார் அவர். இதன் மூலம் அத்தகைய குடும்பங்களின் சூழலை மேம்படுத்த உதவலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்