பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவந்த திருவாட்டி இந்திராணி கலைச்செல்வி, 41, தன் தாயார் 2012ல் இறந்ததும் அத்துறையில் தனக்கு நாட்டம் குறைவதை உணர்ந்தார்.
“நான் அத்துறையில் சேர்வதற்கு உந்துதலாக இருந்ததே என் தாயார்தான். என் பாலர்கல்விப் பட்டயப் படிப்புக்கு அவர்தான் நிதியாதரவு தந்தார். அவர் இல்லாமல் பாலர்கல்வித் துறையில் அதே உற்சாகத்தோடு என்னால் தொடரமுடியவில்லை,” என்றார் திருவாட்டி கலைச்செல்வி.
பழைய ஆசை, புதிய துறை
தனக்கு இளம் வயதில் கணினிகள் மீது ஆர்வம் இருந்ததை நினைவுகூர்ந்த கலைச்செல்வி, அத்துறைக்கு மாறலாமெனச் சிந்தித்தபோது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கைகொடுத்தது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சலுகைகளின் உதவியோடு லித்தன் அகேடமியில் கணினிக் கட்டமைப்பு ஆதரவு (System Support) நிபுணத்துவப் படிப்பை மேற்கொண்டார்.
அதன் மூலம் 2023ல் கணினி ஆதரவுப் பொறியாளராக அவருக்குப் புதிய துறையில் வேலையும் கிடைத்தது. சீரிய பணியால் தற்போது குழுவின் துணைத் தலைவர் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளார்.
மே 23ஆம் தேதி, ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பத்தாம் ஆண்டுநிறைவு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் தம் உரையில் கலைச்செல்வியை முன்னுதாரணமாகச் சுட்டினார்.
“திருவாட்டி கலைச்செல்வி 15 ஆண்டுகளாகப் பாலர்கல்வித் துறைக்குத் தன்னை அர்ப்பணித்தார். ஆனால் தொழில்நுட்பத்தில் பணியாற்ற விரும்பினார். தன் முதல் கணினியை (CPU) 18 வயதில் கட்டமைத்ததும் அவருக்கு அந்த நாட்டம் அவருக்கு வந்தது.
“ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவிநிதி மூலம் கணினிக் கட்டமைப்பு ஆதரவுக்கான படிப்பை மேற்கொண்ட அவர், இன்று கணினி ஆதரவுப் பொறியாளராக (Desktop Support Engineer) பணியாற்றுகிறார். ‘கிளவுட் நிர்வாகம்’ (Cloud administration) குறித்த பட்டயத்தை நோக்கியும் பயணம் செய்கிறார்!” எனப் பாராட்டினார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
ஒரே நேரத்தில் கல்வியும் வேலையும்
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இணையப் பாதுகாப்பில் பட்டயப் படிப்பு முடித்ததும் தன் திறன்களை மேலும் விரிவாக்க விரும்பினார் தனுஜா சுவாமிநாதன், 29.
“அப்பொழுது எனக்குப் பெரும் தரவு ஆய்வுத் துறையிலும் (Big Data Analytics) நாட்டம் இருந்தது. அத்துறையில் என் திறன்களை வளர்க்க வித்திட்டது ஸ்கில்ஸ்ஃபியூச்சரின் தொடக்கத் திட்டங்களில் ஒன்றான ‘கற்றுக்கொண்டே சம்பாதி’ (Earn and Learn) திட்டம் (தற்போதைய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை-கல்வித் திட்டம்),” என்றார் தனுஜா.
அத்திட்டம்வழி அவருக்கு ‘அக்சென்சர்’ நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக வேலை கிடைத்தது. அங்கு நல்ல வழிகாட்டுதலோடு பல்வேறு அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.
பணியாற்றும்போதே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பலதுறைத் தொழிற்கல்லூரிக்குத் திரும்பச் சென்று ஒரு வாரம் தரவு ஆய்வில் பாடங்கள் மேற்கொண்டார் தனுஜா. அதன்வழி நிபுணத்துவப் பட்டயமும் (Specialist Diploma) பெற்றார். அதில் கற்றவற்றை வேலையிடத்தில் பயன்படுத்தவும் ‘அக்சென்சர்’ தனுஜாவுக்கு வாய்ப்பளித்தது.
கடந்த ஓராண்டாகச் சுவிஸ் நிதி நிறுவனத்தில் இணையப் பாதுகாப்பு ஆய்வாளராகப் பணியாற்றும் தனுஜாவுக்கு அந்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்ட அனுபவம் இன்றுவரை கைகொடுக்கிறது.
கற்பதற்குத் தடையில்லை
“தமக்குக் குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன, புதியன கற்க நேரமில்லையெனச் சிலர் கூறுகின்றனர். உண்மையில் பலருக்கும் பாடங்களுக்கான செலவே மையக் கவலையாக உள்ளது.
“ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சலுகைகள் மூலம் இப்பொழுது கட்டுப்படியாகக்கூடிய விலையில் படிக்க முடிகின்றது,” என்றார் திருவாட்டி கலைச்செல்வி.
40 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகைக்கான (பணியிடைக்காலம்) $4,000 நிரப்புதொகை அவர் மேற்கொண்ட மூன்று WSQ பட்டயங்களுக்கான கட்டணத்தைப் பெரும்பாலும் ஈடுகட்ட உதவியது. 40 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர் என்பதால் 90 விழுக்காட்டுச் சலுகையும் கிடைத்தது.

