இவ்வாண்டு தனது 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் மூலம் பெறப்படும் பலன்களை அதிகரிக்க வருங்காலத்தில் கூடுதல் முயற்சிகள் தேவை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
மே 23ஆம் தேதி ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பத்தாண்டு நிறைவு விழாவில் பேசிய திரு வோங், “நாம் ஸ்கில்ஸ்ஃபியூச்சரில் முதலீட்டை அதிகரித்துள்ளோம். ஆண்டுதோறும் நம் ஊழியரணியில் ஐந்தில் ஒருவர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவில் பயிற்சி பெறுகின்றனர். நம்மால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்,” என்றார்.
‘தொழில்துறைச் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதைச் சுலபமாக்குவோம்’
முதலாவதாக, அனைத்து ஊழியர்களுக்கும் தொழில்துறை சார்ந்த பயிற்சிகள் மேற்கொள்வதை எளிதாக்க வேண்டும் என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.
திறன்களை மேம்படுத்த விரும்புவோருக்கு எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை என்பதைப் பலரும் தெரிவித்ததைத் திரு வோங் சுட்டினார்.
இன்றைய காலகட்டத்தில் பலவித பயிற்சிகள் இருப்பதால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நிலவலாம். எனவே, அதிகளவில் பயனளிக்கும் பயிற்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
ஓரிரு நாள்கள் நீடிக்கும் பாடங்கள் பயனுள்ளதாக அமைந்தாலும் கணிசமான திறன்களை வளர்க்கக் கூடுதலான நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது என்ற திரு வோங், “குடும்பங்களைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கு அது எளிதன்று என்பதை அறிவேன்,” என்றார்.
அதை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் (SkillsFuture Level-Up Programme) அறிமுகமானது என்றார் அவர்.
அதன்வழி முழுநேர நெடுங்காலப் பாடங்களுக்கு மாதாந்தர உதவித்தொகை ($3,000 வரை) வழங்கப்படுகிறது. 2026ன் தொடக்கப்பகுதி முதல் இந்த உதவித்தொகை பகுதிநேரப் பாடங்களுக்கும் விரிவாக்கப்படும் என்பதைத் திரு வோங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சரைக் கூடுதலாகத் தொழில்துறைச் சார்ந்ததாக்குவோம்’
தொழில்துறைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாடங்களை வடிவமைப்பது, ஊழியர் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய முதலாளிகளை ஊக்குவிப்பது போன்றவற்றையும் திரு வோங் குறிப்பிட்டார்.
“முதலாளிகள், முதலீடு செய்த ஊழியர்கள் போட்டி நிறுவனத்துக்குச் சென்றுவிடலாம் என்று அஞ்சலாம். முதலாளிகளின் அந்தக் கவலைகளைப் புரிந்து அரசாங்கம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொழில்நிறுவன உதவிநிதிமூலம் மானியம் வழங்குகிறது,” என்று திரு வோங் விளக்கம் அளித்தார்.
‘வாழ்நாள் கற்றலை வலுப்படுத்துவோம்’
நம் ஆயுள்காலம் நீண்டுள்ளதால் ஒவ்வொருவரும் ஒன்று, இரண்டு அல்லது பல துறைகளில் கால்பதிப்போம் என்ற திரு வோங், ஒரே துறையில் இருப்போரும் காலத்திற்கேற்ப புதிய திறன்களைக் கற்பது அவசியம் என்றார்.
ஒவ்வொருவரும் தம் சொந்த பயிற்சிப் பயணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.
திறன் மேம்பாட்டிற்குத் திட்டமிட உதவும் உத்தி
2024 நவம்பரில் துவக்கம் கண்ட வாழ்க்கைத்தொழில், திறன்கள் கடப்பிதழ் (Careers and Skills Passport), அரசாங்கத்தால் சரிபார்க்கப்பட்ட தளங்களிலிருந்து ஒருவரின் வேலைப்பயணம், திறன்கள் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது. வேலை தேடுவோர் ‘ஜாப்ஸ்திரீட்’, ‘ஃபாஸ்ட்ஜாப்ஸ்’ போன்ற வேலைவாய்ப்புத் தளங்களுடனும் அத்தகவல்களைப் பகிரலாம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூரின் இக்கடப்பிதழை ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி 315,000 சிங்கப்பூரர்கள் பயன்படுத்துகின்றனர்.