‘ஸ்கை சென்டர் ஏர் டிராவல்’ நிறுவனத்தின் உரிமம் தற்காலிக ரத்து

1 mins read
0d2ede3b-80d7-4c87-84f6-7ed5534e2a27
‘ஸ்கை சென்டர் ஏர் டிராவல்’ நிறுவனம் சையது ஆல்வி ரோட்டில் அமைந்துள்ளது. - படம்: இணையம்

தணிக்கை செய்யப்பட்ட வரவுசெலவுக் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதால் ‘ஸ்கை சென்டர் ஏர் டிராவல்’ நிறுவனத்தின் பயண முகவர் உரிமத்தை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

உரிமம் பெற்றிருப்பவர், நிதி ஆண்டு முடிவடைந்த ஆறு மாதங்களுக்குள் அதன் அந்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கழகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) கூறியது.

ரத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி நடப்புக்கு வந்தது. கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை அல்லது ஆறு மாதங்களுக்கு எது முன்னதாக வருகிறதோ அதுவரை ரத்து நீடிக்கும்.

உரிமம் ரத்து செய்யப்பட்ட காலகட்டத்தில், சையது ஆல்வி ரோட்டில் அமைந்துள்ள ‘ஸ்கை சென்டர் ஏர் டிராவல்’, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட சேவைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் புதிய பயண முன்பதிவுகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்படாது.

தவறிழைக்கும் பயண முகவர்கள் குறித்து கடுமையான கொள்கை எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் குடியரசின் பயணத் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்