மழை, மேகமூட்டம் ஆகியவற்பைப் பொருட்படுத்தாது, விண்வெளி ஆர்வம் அதிகம் உள்ளர்கள் வியாழக்கிழமை (ஜனவரி 16) இரவு வானில் செவ்வாய் கிரகத்தைக் கண்டுகளித்தனர்.
வியாழக்கிழமைதான் செவ்வாய் கிரகம் இவ்வாண்டு பூமிக்கு ஆக அருகாமையில் இருந்த நாளாகும். அந்த கிரகம் ஆக வெளிச்சமாகவும் தெளிவாகவும் தென்பட்டது.
பூமி, செவ்வாய் கிரகத்துக்கும் நிலவுக்கும் சரியாக நடுவே இருந்ததால் மூன்றும் ஒன்றுக்கொன்று அருகில் இருந்தன. அதனால் இந்நிகழ்வு சாத்தியமானது. செவ்வாய் கிரகம் மேலும் பெரிதாக, வெளிச்சமாக, சிவப்பாகத் தென்பட்டது.
அந்த கிரகத்தை ஓரளவாவது காண முடிந்தோர் படமெடுத்து தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றம் செய்தனர். சிலரால் வீட்டிலிருந்தடியும் செவ்வாய் கிரகத்தைப் பார்க்க முடிந்தது.
எனினும், மேகமூட்டமாக இருந்ததால் அந்த கிரகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்று இணையவாசிகள் சிலர் வருத்தம் தெரிவித்தனர். வியாழக்கிழமையன்று காணப்பட்ட நிலவின் வடிவமும் இடையூறாக இருந்தது என தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தைப் பார்த்து ரசித்து சமூக ஊடகங்களில் படங்களைப் பதிவேற்றம் செய்தோரில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் ஒருவர்.