வெற்றிச் சிறகுகள்: தனியார் விமானி உரிமம் பெற்ற 25 இளையர்கள்

வெற்றிச் சிறகுகள்: தனியார் விமானி உரிமம் பெற்ற 25 இளையர்கள்

2 mins read
650724fd-d4a1-4537-a365-5808ecc522af
சிங்கப்பூர் இளம் விமானிகள் சங்கத்தின் தனியார் விமானி உரிமம் மற்றும் விமானத்துறை விருது விழா சனிக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்றது.  - படம்: தற்காப்பு அமைச்சு

பள்ளி சார்ந்த பொறுப்புகளுக்கிடையே, விமானம் ஓட்டுவதற்கான தனியார் உரிமப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள இளையர்களின் சாதனையைக் கொண்டாடுவதில் தாம் பெருமிதம் கொள்வதாகத் தற்காப்பு மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.

சிங்கப்பூர் இளம் விமானிகள் சங்கத்தின் (SYFC) தனியார் விமானி உரிமம் மற்றும் விமானத்துறை விருது விழா சனிக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்றது.

அதில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் ஸாக்கி, ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு தனியார் விமானி உரிமத்தைப் பெற்றுக்கொண்ட 25 மாணவர்களைப் பாராட்டிப் பேசினார்.

“கல்வி, குடும்பம், தனியார் விமானி உரிமத்திற்கான வகுப்பு என அனைத்திற்கும் நேரம் ஒதுக்குவது எளிதன்று. விமானி ஆவதற்கான உங்கள் பயணத்தில் நீங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறீர்கள்,” என்றார் அவர்.

சங்கத்தின் வரலாற்றை நினைவுகூர்ந்த திரு ஸாக்கி, “உள்ளூர், நிலவியல் சார்ந்த அரசியல் சவால்களை நாடு சந்தித்தபோது, சொந்த ஆகாயப் படையைக் கட்டமைப்பது அவசியம் என்பதை நம் முன்னோடித் தலைமுறைத் தலைவர்கள் உணர்ந்தனர். அதற்கேற்ப, 1971ஆம் ஆண்டு இளநிலை விமானிகள் சங்கம் (Junior Flying Club) என்ற ஒன்று துவக்கம் கண்டு இன்று ‘எஸ்ஒய்எஃப்சி’ என்று அறியப்படும் இச்சங்கம், விமானத்துறை மீதான ஆர்வத்தை நம் இளையர்களிடம் துளிர்த்தெழச் செய்யும் நோக்கில் செயலாற்றி வருகிறது.

“நமது வான்வெளியைத் தற்காத்து, குறிப்பாகக் சிங்கப்பூர் குடியரசின் ஆகாயப் படையில் சேவையாற்றுவதில் ஊக்கம் கொள்ளும் நிலையான திறன்மிக்க விமானிகளின் குழுவை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்கு,” என்று சொன்னார்.

சிங்கப்பூர் இளம் விமானிகள் சங்கத்தில் இதுவரை ஏறக்குறைய 7,800 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளதாகவும், ஏறத்தாழ 1,280க்கும் அதிகமானோர் வெற்றிகரமாகத் தனியார் விமானி உரிமம் பெற்றுள்ளதாகவும் திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஆகாயப் படையின் வலிமை, அதன் விமானங்கள் மற்றும் மேம்பாடுமிக்க தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் நாட்டு மக்களிடையேயும் உள்ளது என்று சுட்டினார் அமைச்சர் ஸாக்கி.

நாட்டின் ஆகாயவெளியைத் தற்காக்கும் அடுத்த தலைமுறையின் ஆகாயப் படை வீரர்களாக, வீராங்கனைகளாக உருவெடுக்கும் வகையில் இளம் சிங்கப்பூரர்களை நாம் ஊக்குவிப்பதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்