பாசிர் ரிஸ் ஸ்திரீட் 72ல் உள்ள ஒரு கடைத்தொகுதியில் உள்ள கடை ஒன்றில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 61 வயது ஆடவர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட களேபரத்தில் கடைத்தொகுதி வாடிக்கையாளர்களும் அங்குள்ள வர்த்தகர்களும் மறைவிடம் தேடி ஓடியதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை (டிசம்பர் 20) மாலை 4 மணியளவில் பாசிர் ரிஸ் வெஸ்ட் பிளாசாவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்ததாக அங்கு சென்ற செய்தியாளர்கள் கண்டறிந்தனர்.
தாக்குதல் மேற்கொண்டவர் கத்தியுடன் இருந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தவுடன் அங்கு சென்ற பாசிர் ரிஸ் குடியிருப்பாளர் ஒருவர் ‘ராயல் ரீஜண்ட்’ என்ற பல்பொருள் விற்பனைக் கடை அருகே மூவர் காயமடைந்த நிலையில் இருந்ததைத் தான் கண்டதாக விளக்கினார்.
அந்தப் பல்பொருள் விற்பனைக் கடை தொலைபேசிப் பொருள்கள், காலணிகள், கைப்பைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்ததாக அந்தத் தொகுதிவாசி தெரிவித்தார்.
‘ராயல் ரீஜண்ட்’ கடையைச் சுற்றித் தடுப்புவேலி போடப்பட்டது. கடையில் காலுறைகளும் காலணிகளும் தரையில் சிதறிக் கிடந்தன.
காயமடைந்தவர்களில் இருவர் கடைக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும் ஒருவர் தரையில் புரண்டுகிடந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“அவர்கள் ரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டனர். சம்பவ இடத்தில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், பலர் கையில் துப்பாக்கியுடன் இருந்தனர்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு குடியிருப்பாளர் தெரிவித்தார்.
‘ராயல் ரீஜண்ட்’ கடை உரிமையாளர்கள் காயமடைந்ததாக மற்றொரு குடியிருப்பாளரான லீ என்பவர் தெரிவித்தார்.
தாக்குதலில் காயமுற்ற 53 வயது ஆடவர் ஒருவரும் 53 வயது மற்றும் 55 வயதுடைய மாதர் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
“61 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பகுதி சுயநினைவுடன் இருந்தார். ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்ததற்காக அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்,” என்று காவல்துறை தெரிவித்தது.
இச்சம்பவத்தில் காயமுற்ற நால்வரும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காயமுற்ற மாதர் இருவரும் சகோதரிகள் என அறியப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர் பாசிர் ரிசில் உள்ள கைப்பேசிக் கடை ஒன்றில் வேலை செய்பவர் என நம்பப்படுகிறது.
காயமுற்றவர்களுக்குத் தாக்குதல்காரர் தெரிந்தவர். அவர்களுக்கு முன்விரோதம் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ சீ ஹியன் புதன்கிழமை இரவு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், அந்தச் சந்தேக ஆடவர் தனியாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்றார் அவர்.
“இதில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே நீடித்து வந்த சச்சரவுக்கும் இச்சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது,” என்றார் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு டியோ.
காயமுற்ற நால்வரின் உடல்நிலை சீராக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

