சாபா நிலநடுக்கத்தின்போது சிங்கப்பூரில் இலேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன: வானிலை ஆய்வு மையம்

சாபா நிலநடுக்கத்தின்போது சிங்கப்பூரில் இலேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன: வானிலை ஆய்வு மையம்

2 mins read
a376ba31-1eb7-497b-9f73-d0104b151c83
சுண்டா மெகாத்ரஸ்ட் மற்றும் கிரேட் சுமத்ரன் ஃபால்ட் பகுதிகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களின் அதிர்வுகளை சிங்கப்பூர் ஏற்கெனவே அனுபவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலேசியாவின் சாபா மாநிலம் அருகில் உள்ள கடற்பகுதியில் திங்கட்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, சிங்கப்பூரில் உள்ள கண்காணிப்பு நிலையங்களால் இலேசான நில அதிர்வுகள் கண்டறியப்பட்டன. இங்குள்ள சிலரும் இந்த அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம், பதிவான நில அதிர்வுகள் கடந்த காலங்களில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் போது எடுக்கப்பட்ட அளவுக்கு இணையாக இருந்ததாகத் தெரிவித்தது.

சுண்டா மெகாத்ரஸ்ட் மற்றும் கிரேட் சுமத்ரன் ஃபால்ட் பகுதிகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களின் அதிர்வுகளைச் சிங்கப்பூர் ஏற்கெனவே அனுபவித்துள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் வாரியத்தின்கீழ் இயங்கும் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், சாபா நிலநடுக்கம் சிங்கப்பூரிலிருந்து ஏறத்தாழ 1,500 கிலோ மீட்டர் தொலைவில் தள்ளி ஏற்பட்டாலும், அது 620 கிலோ மீட்டர் ஆழத்தில் மிகத் தீவிரமாகப் பதிவானது என்று குறிப்பிட்டது.

“ஆழமான பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சீஸ்மிக் அலைகளை உருவாக்குகின்றன. இவை குறைந்த ஆற்றல் இழப்புடன் நீண்ட தூரத்திற்குத் திறம்படப் பயணிக்கக் கூடியவை. இதுவே சிங்கப்பூரில் அதிர்வுகள் உணரப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம்,” என்று அந்த மையம் கூறியது.

தோ பாயோ, பாலஸ்டியர் மற்றும் பொங்கோல் போன்ற இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இணையவாசிகள் தெரிவித்தனர்.

ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் வசிக்கும் ‘dcburn’ என்ற ரெட்டிட் பயனர், சிங்கப்பூரில் தாம் இதுவரை உணர்ந்த அதிர்வுகளிலேயே இது மிகவும் வலிமையானது என்று கூறியுள்ளார்.

அங் மோ கியோவில் வசிக்கும் சோனியாகோர் சோனியாசிங் என்ற ஃபேஸ்புக் பயனர், வீட்டில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது இலேசான அதிர்வை உணர்ந்ததாகக் கூறினார்.

“எனது ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதோ என்று முதலில் நினைத்தேன். திடீரென தலைச் சுற்றல் ஏற்பட்டது. பீஷானிலிருந்து அங் மோ கியோவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த எனது மகளும் அந்த அதிர்வை உணர்ந்தாள்,” என்று அவர் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்
நில அதிர்வுசாபாதோ பாயோ