பார்ட்லி ரோட்டையும் பிடாடாரி வட்டாரத்தின் முக்கியச் சாலையையும் ஒரு சாலைச் சந்திப்பு இணைக்கும்.
அந்த சாலைச் சந்திப்பில் ஒரு புதிய இணைப்புச் சாலையும் (ஸ்லிப் ரோடு) நடையர்களுக்கான மேம்பாலமும் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைச் சந்திப்பு கட்டி முடிக்கப்பட்டவுடன் அது, பிடாடாரி பார்க் டிரைவ் வழியாக பார்ட்லி ரோட்டையும் சிராங்கூன் அவென்யூ ஒன்றையும் பிடாடாரியுடன் இணைக்கும்.
புதிய இணைப்புச் சாலை, பார்ட்லி ரோட்டில் மாரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள சாலைச் சந்திப்புடன் சேர்க்கப்படும். பிராடல் ரோட்டிலிருந்து வரும் வாகன ஓட்டுநர்கள் சிராங்கூன் அவென்யூ ஒன்றுக்குள் நேரடியாக இடப்புறம் திரும்ப வகைசெய்வது இந்நடவடிக்கையின் இலக்கு என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று பதிலளித்தது.
தற்போது அவ்வழியே செல்லும் வாகனமோட்டிகள், சாலைச் சந்திப்பில் உள்ள சமிக்ஞையைக் கடந்த பிறகே சிராங்கூன் அவென்யூ ஒன்றுக்குள் இடது புறம் திரும்ப முடியும்.
மேலும், பார்ட்லி ரோடு ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் சிராங்கூன் அவென்யூ ஒன்றுக்குப் போவதற்கு வலப்புறம் திரும்புவதற்கென தனிப்பட்ட சாலைத் தடம் ஒன்றும் அமைக்கப்படும் என்று வீவக குறிப்பிட்டது. பார்ட்லி ரோட் ஈஸ்ட்டில்தான் மாரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
அதோடு, பார்ட்லி கிறிஸ்துவ தேவாலயத்துக்கு அருகே நடையர்களுக்கான புதிய மேம்பாலம் கட்டப்படும் என்றும் அதில் மின்தூக்கிகள் அமைக்கப்படும் என்றும் வீவக சொன்னது. பிடாடாரி குடியிருப்பு வட்டாரத்துக்குப் போவதற்கான தொடர்புகளை மேம்படுத்துவது அதன் இலக்கு.
கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று வீவக, சம்பந்தப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள காம்பிர் குடியிருப்பு வட்டாரவாசிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது. அப்பகுதியில் இடம்பெறவுள்ள மாற்றங்களைக் குடியிருப்பாளர்களிடம் விவரிக்கவும் அவர்களின் அக்கறைகளைத் தெரிந்துகொள்ளவும் அந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

