சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ள புருணை பட்டத்து இளவரசர் அல்-முக்ததீ பில்லாவுக்கும் அவரது குழுவுக்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் புதன்கிழமை (செப்டம்பர் 11) இரவு விருந்தளித்துச் சிறப்பித்தார்.
சிங்கப்பூர்- புருணை இளம் தலைவர்கள் செயல்திட்டத்திற்காக புருணை பட்டத்து இளவரசர் அல்-முக்ததீ பில்லா சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பார்.
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிங்கப்பூர்- புருணை இளம் தலைவர்கள் செயல்திட்ட சந்திப்பு 10வது முறையாக நடக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பங்காளித்துவம் தொடங்கி இந்த ஆண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளில் இருக்கும் இளம் தலைவர்கள் இடையே நல்ல நட்பும் புரிதலும் ஏற்பட்டுள்ளது, அதற்கு முக்கிய காரணமாக சிங்கப்பூர்- புருணை இளம் தலைவர்கள் செயல்திட்டம் உள்ளது என்று மூத்த அமைச்சர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும் திரு லீ பட்டத்து இளவரசருக்கும் அவரது குழுவுக்கும் விருந்தளிக்கும் படத்தையும் பதிவிட்டார்.
விருந்து நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

