மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதியில் போட்டியிடமாட்டார்.
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 21) திரு டியோ இதனை அறிவித்தார்.
“பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் அவரின் நான்காம் தலைமுறை (4ஜி) அணிக்கும் நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன். நான் எவ்வாறு சிறப்பாகப் பங்காற்ற முடியும் என்று பிரதமர் நினைக்கிறாரோ அவரின் எண்ணம்போல் அவரது குழுவுக்குப் பங்காற்ற நான் தயாராக இருக்கிறேன்,” என்று அமைச்சர் டியோ கூறினார்.
இதனையடுத்து பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி (மசெக) அணிக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தலைமை தாங்குவார் என்று திரு டியோ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பாசிர் ரிஸ்-சாங்கியில் போட்டியிடவிருக்கும் புதிய மசெக அணியை அவர் அறிமுகப்படுத்தினார். மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், ஒரு தவணைக்காலம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ள ஷாரல் டாஹா, புதுமுகம் வெலரி லீ ஆகியோர் அந்த அணியில் அடங்குவர்.
“மேலும் பல ஆண்டுகள் உங்களுக்குச் சேவையாற்றுவதற்கு ஏதுவான வலுவான குழு இங்குள்ளது என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கிறேன்,” என்று பொறுப்பை ஒப்படைப்பது குறித்துப் பேசிய திரு டியோ குறிப்பிட்டார்.
தாம் பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு அவர், “சற்று பொறுமையாக இருக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு நாள்கள் காத்திருங்கள், எல்லாம் தெளிவாகத் தெரியும்,” என பதிலளித்தார். திரு டியோ, வேட்புமனுத் தாக்கல் தினமான நாளைய தினத்தைக் (ஏப்ரல் 23) குறிப்பிட்டு அவர் பேசினார்.
ரியர் அட்மிரல் பதவி வகித்த முன்னாள் கடற்படைத் தளபதியான மூத்த அமைச்சர் டியோ, 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக அரசியலில் களமிறங்கினார். அப்போது மரின் பரேட் குழுத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட மசெக அணியில் அவர் இடம்பெற்றார். அந்த அணி இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து மசெகவின் நம்பகமான முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்தார். பிறகு பாசிர் ரிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆறுமுறை வெற்றிபெற்றார்.
கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து அவர் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியின் மசெக அணிக்குத் தலைமை தாங்கும் அமைச்சராக இருந்து வந்துள்ளார்.