சிறு கோரிக்கை நடுவர் மன்றங்கள் மூலம் பூசல்களுக்குத் தீர்வுகாண விரும்பும் பயனீட்டாளர்களும் வர்த்தகர்களும் இனி செயற்கை நுண்ணறிவின் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட, எதிர்த்தரப்பு சமர்ப்பிக்கும் ஆவணங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு அந்த ஆவணங்களை சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்க்கலாம். சிங்கப்பூரில் தற்போது அந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
சிறு கோரிக்கை நீதிமன்றத்தின் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு முறையை உருவாக்கும் நோக்குடன் சிங்கப்பூர் நீதிமன்றங்களும் அமெரிக்காவைச் சேர்ந்த புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சட்ட நிறுவனம் ஒன்றும் ஒத்துழைக்கின்றன. இந்த செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்புச் சேவை, அந்த ஒத்துழைப்பின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள முதல் திட்டமாகும்.
சிறு கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியை நாடும் வழிமுறைகளில் ஆக அதிக அளவில் குறைபாடுகள் இருக்கலாம்; அந்த வகையில், சிறு கோரிக்கை விவகாரங்களில் நீதி நாடுவோருக்குக் கைகொடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் முயற்சிகள் மிகவும் முக்கியமாக விளங்குகின்றன என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் புதன்கிழமை (ஏப்ரல் 16) குறிப்பிட்டார்.
சிறு கோரிக்கை வழக்குகள் பொதுவாக எளிமையாகக் கையாளப்படக்கூடியவை. இருந்தாலும் அவற்றில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகளுக்கு நீதித்துறை உதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். அந்த இடையூறுகள், சம்பந்தப்பட்டோர் தங்களின் வாதத்தை முன்வைப்பதற்கும் தங்களின் உரிமைகளைத் தற்காப்பதற்கும் சவாலாக விளங்கலாம் என்று திரு மேனன் சுட்டினார்.
“அந்தக் குறைபாட்டைச் சரிசெய்வதில், புதிய தொழில்நட்ப அம்சங்களின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளும் புத்தாக்கத் தீர்வுகள் பெரிய அளவில் கைகொடுக்கக்கூடும். மனித உழைப்பை மட்டும் நம்பியிருந்தால் பின்பற்ற முடியாத வழிமுறைகளைப் பின்பற்றவும் சாதிக்க முடியாதவற்றைச் செய்து முடிக்கவும் அவை வகைசெய்யும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிறு கோரிக்கை நீதிமன்றங்களின் 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அரசு நீதிமன்றங்களில் நடந்த நிகழ்ச்சியில் திரு மேனன் பேசினார்.

