சிங்கப்பூரில் இயங்கி வரும் சிறிய நடுத்தர உணவகங்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக அறியப்படுகிறது.
அதிகரிக்கும் செலவினங்கள், உள்ளூரில் குறைந்து வரும் தேவைகள், உணவு குறித்த மக்களின் கருத்துகள் ஆகியவை உணவுத்துறையில் ஒரு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளதால் அண்மையில் பல உணவகங்கள் மூடப்பட்டன.
உணவு வகைகளில் மக்களின் விருப்பு வெறுப்புகளை நன்கு அறிந்த தனித்துவமான இடங்கள் இந்த உணவகங்கள். வேறெங்கும் கிடைக்காத உணவுகளைத் தேடிச் செல்லும் இடமாகவும் வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களை அழைத்துச் செல்லும் இடமாகவும் இவை விளங்குகின்றன.
எனினும், உணவகக் குழுமங்கள் அல்லது உணவகங்களின் அங்கமாக இல்லாத தனிப்பட்ட முறையில் இயங்கும் இவ்வகை சிறு உணவகங்களின் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். கடந்த ஆண்டில் இத்தகைய தனித்துவமான உணவகங்கள் மூடப்பட்டது பெரும் கவலையளிக்கும் அம்சமாக உருவெடுத்துள்ளது.
பிப்ரவரியில், ஆன் சியாங் ரோட்டில் உள்ள உணவகமான லோலா, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வாயிலை அடைத்தது.
மார்ச்சில், மேலும் இரண்டு உணவகங்கள் மூடப்பட உள்ளன. ஒன்று க்ளூனி கோர்ட்டில் உள்ள ‘‘பர்கர் ஸ்டால்வர்ட் ரெலிஷ்’’ உணவகம். இது 19 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. ‘நார்த் கெனால்’ ரோட்டில் உள்ள ‘‘ஆசிய ஃப்யூஷன் உணவகமான ஐபிட்’’ மற்றொன்று ஆகும். இவை அண்மைய நடப்புகள்.
2025ஆம் ஆண்டில், பார்பிக்யூ ஓமகஸே உணவகம், தி சோஷியல் அவுட்காஸ்ட், மாடர்ன் சவுத்-ஈஸ்ட் ஏஷியன் கொரிய உணவகமான ஒன்மி உள்ளிட்ட பல உணவகங்கள் மூடப்பட்டன.
டக்ஸ்டன் ஹில்லில் ‘என்கோர் பை ருபார்ப்’ உணவகத்தை நடத்தும் பிரிட்டிஷ் சமையல் நிபுணர் பால் லாங்வொர்த், 47, “உணவு மற்றும் பானத்துறை வணிகத்தில் நிலவும் சூழலால் நாங்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். இது மிகவும் கடினமானது. போராடி வருகிறோம். ஆயினும் இது எதற்கு என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,’’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகம் மீண்டதாகக் கருதப்படும் 2024ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உணவுத் துறையின் ஒவ்வோர் அங்கமும் பாதிக்கப்பட்டு வருவதற்கான சான்றுகள் உள்ளன.
அக்காலத்திற்குப் பிறகு எல்லைகள் முழுமையாகத் திறக்கப்பட்டிருந்தன. அதன் விளைவாகப் பயணங்களுடன் செலவுகளும் அதிகரித்தன. சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று செலவு செய்யவும் உணவு அருந்தவும் விரும்பியதால், இங்குள்ள உணவகங்களில் அவர்களது வருகை குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் 3,047 உணவு வணிகங்கள் மூடப்பட்டன. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும். ஆனால், கணக்கியல் நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் 2025ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் அதைவிட அதிகமான எண்ணிக்கையாக 3,148 வணிகங்கள் மூடப்பட்டதாகக் காட்டுகின்றன.

