இந்தியச் சமூகத்தின் கதைதான் சிங்கப்பூர் கதை என்றும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சிங்கப்பூருக்கு இந்தியர்களின் பங்கு பெரிது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் பாராட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்தியச் சமூகம் செழிப்பதைக் கல்வி, தொழில்கள் போன்றவற்றின் மூலம் காண முடிவதாகக் குறிப்பிட்ட அவர், இந்திய அரசாங்க ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றும் பங்கு அரசாங்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகச் சொன்னார்.
இளையர்களுக்காக தமிழ் முரசு நடத்திய ‘வாங்க இப்போ பேசலாம்’ கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் வோங். அவருடன் தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் கலந்துகொண்டார்.
கிளார்க் கீயில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வெவ்வேறு இந்தியச் சமூக அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளையர்கள் கலந்துகொண்டனர்.
“இதுவரை கலந்துரையாடல்களில் நான் பார்த்ததில் இந்திய இளையர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்கள், மனநலம் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நாம் மிகச் சிறிய சமூகமாக இருந்தாலும் நம்மால் அதை ஒரு நன்மையாக்க முடியும். இதை இளையர்கள் சாதகமாகப் பயன்படுத்த நான் ஊக்குவிக்கிறேன்,” என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சிக்கு அறிமுகப்படுத்தும் புதுமுகங்களில் கண்டிப்பாக இந்தியர்களும் இருப்பார்கள் எனக் கூறிய பிரதமர் வோங், அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு தனியார் துறையிலும் தொழிலிலும் இந்தியர்கள் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
“இந்தியச் சமூகம் எந்த வகையில் சிறப்பாக செய்து வருகிறது என்பதை இது குறிக்கிறது,” என்றார் அவர்.
கலாசார ரீதியாக இந்தியச் சமூகம் பன்முகம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர் இந்தியர்கள் தனித்துவம் வாய்ந்த சிங்கப்பூர் இந்தியச் சமூகமாக பரிணாமம் கண்டுள்ளதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கலந்துரையாடலில் எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், ஆங்கில, தமிழ், மலாய் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ் முரசு செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மது கலந்துரையாடலை வழநடத்தினார்.
கலந்துரையாடல் ‘செத்தம் ஹவுஸ்’ விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்தது. இந்த விதிகளின்படி பங்கேற்பாளர்கள், கலந்துரையாடலின்போது கூறிய தகவல்களை வெளியிடலாம். ஆனால், அவர்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது.
சிங்கப்பூர் இந்தியக் கலாசாரம், இந்தியாவில் இருக்கும் கலாசாரத்தில் இருந்து வேறுபட்டது. இது சிங்கப்பூர் இந்தியர்கள் எவ்வாறு தங்களின் கலாசாரத்தை தக்கவைத்து, அதே நேரத்தில் சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்று கூறினார் பிரதமர்.
இந்தியர்கள் தங்களின் சமூகத்திற்கு அப்பாற்பட்டு இதர இனத்தவர்களுடன் இணைந்து சிங்கப்பூரர் எனும் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தலாம் என்று வலியுறுத்தினார் பிரதமர் வோங்.
இளையர்கள் முன்வைத்த கேள்விகளில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம், உயரும் வாழ்க்கைச் செலவினம், புவிசார் அரசியல் பதற்றம், அமெரிக்க வரிவிதிப்பு, சுகாதாரப் பராமரிப்பு, வேலைவாய்ப்பு, விளையாட்டு, அரசியலுக்கு இளையர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளை ஒட்டி கலந்துரையாடப்பட்டது.
இந்த விவகாரங்கள் குறித்த பதில்களைப் பேச்சாளர்கள் இளையர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.
“இந்தக் கலந்துரையாடலில் பகிரப்பட்ட தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இது என்னை போன்ற இளையர்களின் எதிர்காலத்திற்கு மிக உதவியாக இருக்கும்,” என்று கலந்துரையாடலில் பங்கேற்ற நற்பணிப் பேரவை இளையர் பிரிவுத் தலைவர் கந்தேஸ்வரி உதயகுமார், 34, கூறினார்.