சிறிய நாடுகள் பெரிய நாடுகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவற்றை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவை மற்ற நாடுகள் மூலமாக செயல்படலாம் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் வெள்ளிக்கிழமை ஆங்கில மின்னிலக்க சஞ்சிகை ஏற்பாடு செய்த ‘திங்க்சைனா’ என்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூறினார்.
சீனாவும் அமெரிக்காவும் தற்போதைய நிலையில் ஒன்றை ஒன்று எதிர்ப்பதன் மூலம் தங்கள் வலிமையைக் காட்ட முற்படுகிறதே தவிர அவை ஒத்துழைப்பதை நாடவில்லை என்றும் மூத்த அமைச்சர் கூறினார்.
“பெரிய நாடுகளுடன் ஒத்துப்போனாலும் அவற்றை எதிர்த்து செயல்பட்டாலும் அதன் விளைவுகள் பேராபத்தாக முடியும்,” என்று அவர் விளக்கினார்.
இவ்விரு பெரிய நாடுகளுக்கு இடையே மூன்று விதமான பிரச்சினைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதில் முதலாவது தைவான் போன்ற போருக்கு இட்டுச் செல்லக்கூடிய பிரச்சினை.
இரண்டாவதாக, வர்த்தக சமநிலையின்மை போன்ற ஆழமான கருத்துவேறுபாடுகள். இவை போருக்கு கொண்டு செல்லாது.
அடுத்தது, பருவநிலை மாற்றம் போன்ற உலக நாடுகளுக்கு பொதுவான பிரச்சினைகள்.
அமெரிக்கா, சீனா இருதரப்பும் தாங்கள் போரை விரும்பவில்லை என்று கூறியுள்ள நிலையில் தைவான் போன்ற முதலாவதாக குறிப்பிட்ட பிரச்சினைகளை அவற்றை எப்படிக் கையாள்வது என்று முடிவு செய்ய வேண்டும்.
“ஆனால், இதில் ஏதேனும் ஒரு தரப்பு போர் தவிர்க்க இயலாத ஒன்று எனத் தீர்மானித்தால், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையான பிரச்சினைகளை போருக்கு ஆயத்தமாகும்போது அவற்றை வைத்து தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கிக்கொள்ள அவ்விரு நாடுகளும் பயன்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதில் சிறிய நாடுகள் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த திரு டியோ, தற்போதைய நிச்சயமற்ற உலக சூழலில் அவை மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட ஊக்கம் தருவதாகக் கூறினார்.
இதற்கு உதாரணமாக பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், நியூசிலாந்து போன்றவை இந்தியாவிடம் நாட்டம் காட்டுவதால் அந்த நாடு பலனடையும் என்று எதிர்பார்க்கலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

