குவீன்ஸ்டவுன் வீட்டில் சிறு காய்கறித் தோட்டம்: வியப்பூட்டும் பெண்மணி ஐரீன்

குவீன்ஸ்டவுன் வீட்டில் சிறு காய்கறித் தோட்டம்: வியப்பூட்டும் பெண்மணி ஐரீன்

1 of 2
The Straits Times
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

31 Oct 2026 - 11:09 pm

2 mins read

குவீன்ஸ்டவுனில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில், ஒரு பெண்மணி சமைத்து உண்ணக் கூடிய பலவித காய்கறிச் செடிகளை வளர்த்து வருகிறார்.

அவரது வீடு 45 மாடியில் உள்ளது. வீட்டின் ஒருபக்கத்தில் வெளிப்புறத்தைப் பார்க்கும் விதமாக அமைந்துள்ள ‘பால்கனி’ எனப்படும் கூடுதல் இடத்தை திருவாட்டி ஐரீன் டான் உணவுத் தோட்டமாக வடிவமைத்துள்ளார்.

ஏறத்தாழ 2 சதுர மீட்டர் அளவே பரப்பளவு உள்ள அவ்விடத்தில், செழிப்பான மூலிகைத் தோட்டம்போல பலவித பாரம்பரியச் செடிகள் வளர்ந்துவருகின்றன.

சிங்கப்பூரின் வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த வானிலையில் வீடுகளில் செடிகளை வளர்ப்பது சவாலாக இருப்பினும், 12க்கும் மேற்பட்ட மூலிகைகளையும் காய்கறிகளையும் அவர் வளர்த்து வருவதோடு அவர் உட்கொள்ளும் உணவிலும் அவற்றைச் சேர்த்துக்கொள்கிறார்.

இன்ஸ்டகிராம் (@woomaamee) எனப்படும் அவரது சமூக ஊடகத்தில் 24,000க்கும் மேற்பட்டோரால் தொடரப்படும் அவருக்கு 45 வயதாகிறது. உண்ணும் உணவுக்குத் தேவையானவற்றை சொந்தமாக வளர்த்து பலருக்கு வழிகாட்டியாகவும் அவர் விளங்குகிறார்.

கடந்த 2020ல் கொவிட்-19 பெருந்தொற்றின் முடக்கநிலையின்போது தேசியப் பூங்காக் கழகத்திடம் அவர் ஒருசில இலவச விதைகளைப் பெற்றுக்கொண்டார். அதுமுதல் வீட்டில் தோட்டம் அமைக்கும் அவரது பயணம் தொடங்கியது.

நகர்ப்புற விவசாயம் சிங்கப்பூரில் சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவரது இல்லம் உருவெடுத்துள்ளது.

கத்தரிக்காய், மிளகாய், கற்பூரவல்லி, லாக்சா இலை, துளசி, புதினா, பீர்க்கங்காய் போன்ற வெப்பமண்டலத் தாவரங்கள் சிங்கப்பூரில் செழித்து வளர்வதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ‘மெடிடரேனியன்’ எனப்படும் மத்திய தரைக்கடல் மூலிகைகளான ரோஸ்மேரி, தைம், ஓரிகானோ போன்றவை இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஈடுகொடுப்பதில்லை என்றார் ஐரீன்.

அவற்றை வளர்ப்பதில் பலர் தோல்வியடைகின்றனர் என்ற ஐரீன், அதிக தண்ணீர் ஊற்றுவதும், இயற்கையில் இறுக்கமான மண் அமைப்பும் வேர்களை அழுகச் செய்கின்றன என்றார்.

இடநெருக்கடியைச் சமாளிக்கச் செடிகளை மேல்நோக்கி செங்குத்தாக வளர்ப்பது இவரது முக்கிய உத்திகளில் ஒன்று.

பால்கனியில் உள்ள சன்னல் போன்ற கம்பிகளில் செடிகொடிகளைப் படரவிட்டு இடத்தைச் சேமிக்கலாம். அது காற்றோட்டத்தையும் உறுதிசெய்கிறது.

வழக்கமான களிமண் தொட்டிகளுக்குப் பதிலாக எடை குறைவான ‘கேன்வாஸ்’ பைகளை ஐரீன் பயன்படுத்துகிறார். மண்ணைத் தளர்வாக வைத்திருக்க மண்புழு உரம், வாழைப்பழத் தோல் நீர் ஆகிய இயற்கை உரங்களை அவர் நாடுகிறார்.

உதாரணமாக ரோஸ்மேரி போன்றவற்றை வளர்க்க ‘லெக்கா’, ‘பியூமிஸ்’, ‘பெர்லைட்’ ஆகியவற்றை அதிகம் சேர்த்து, நீர் உடனடியாக வடியும் துகள்களாலான கலவையை அவர் ஆர்வலர்களுக்குப் பரிந்துரைக்கிறார்.

பருவநிலைக்கு ஏற்ப செடிகொடிகளை நிர்வகிப்பதன் வழியாக சிறிய பால்கனி அளவிலான தோட்டத்திலும் சிறந்த பசுமையை உருவாக்க முடியும் என்பதை இவர் நிரூபித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்