புத்தாண்டுத் தீர்மானங்களின் வலிமை, அவற்றை உறுதியான மனத்தோடு பின்பற்றுவோரிடம் கேட்டால் புலப்படும்.
கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் யோகானந்தன், 49, கடந்த 2024ஆம் ஆண்டின் புத்தாண்டுத் தீர்மானமாகப் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டவர்.
“இந்த 2025ல், நான் நிரந்தரமாக இந்தியாவுக்குத் திரும்ப தீர்மானம் எடுத்துள்ளேன்,” என்று தமிழ் முரசிடம் பகிர்ந்தார் திரு யோகானந்தன்.
புத்தாண்டைச் சிறப்பாகத் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரைப் போல் அல்லும் பகலும் அயராது உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் முகங்களில், வியர்வைத் துளிகளின் மத்தியில் ஆனந்தத் துளிகளை அள்ளித் தெளித்தது, இரவு 5.30 முதல் 9 மணி வரை அந்நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா.
சுமார் 1,600 வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு ஒன்றுகூடியிருந்தனர். உணவுக்கும் விளையாட்டுகளுக்கும் வரிசைகள் நீண்டுகொண்டே போயின. 1,500 பேருக்குப் பிரியாணி பரிமாறப்பட்டது. ‘ரெட் புல்’ பானங்கள், பனிக்கூழ், ‘ஹாட் டாக்’, சிற்றுண்டி வழங்கப்பட்டன. ஆனால், விளையாட்டுகளில் பங்கேற்று மகிழும் தாகமும் பசியும் ஊழியர்களிடத்தில் தணியவில்லை.
இழுபறி விளையாட்டு (tug-of-war), ‘மினி கோல்ஃப்’ (mini golf) போன்ற விளையாட்டுகள் ஊழியர்களின் வலிமையையும் தப்பாத குறியையும் பிரதிபலித்தன. அவர்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டனர்.
மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கொண்டாட்டத்தில் மொத்தம் பத்து பரிசுகள் அதிர்ஷ்டக் குலுக்கில் வழங்கப்பட்டன. முதல் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலிக்கு 500 வெள்ளி கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 2024ல் புதிதாகத் திறக்கப்பட்ட செம்பவாங் பொழுதுபோக்கு நிலையம் கொண்டாடும் முதல் புத்தாண்டு இதுவே.
களைப்பைக் களையும் களிப்பு
பாலமுருகன், தவா என்ற இரு வெளிநாட்டு ஊழியர்களும் நண்பர்களும் கடந்த ஈராண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வு, மனவுளைச்சல் போன்றவற்றைக் கையாள உதவுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
“நமக்கென்று சுமார் மூன்று மணி நேரம் பொழுதுபோக்காகச் செலவிடுவது நம் மன ஆரோக்கியத்துக்கும் நன்று. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார் தவா.
“எனக்குத் திருமண ஆசை உள்ளது. இவ்வாண்டில் எனக்கென ஒரு குடும்பம் வேண்டும் என விரும்புகிறேன்,” என்று புன்னகைத்தார் பாலமுருகன்.
புத்தாண்டின் முன்தினமும் செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது சுமார் 2200 வெளிநாட்டு ஊழியர்கள் வந்திருந்தனர். புகழ்பெற்ற பங்ளாதேஷிய பாடகர் மொனீர் கான் மக்களைப் பரவசப்படுத்தினார்.
சென்ற ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரியாணி அதிகபட்சம் 1,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இவ்வாண்டு புதிய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
ஜனவரி 19ஆம் தேதியன்று பொங்கலுக்காகவும் பிப்ரவரி 9ஆம் தேதி சீனப் புத்தாண்டுக்காகவும் செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

