கெபாயா உடையை வாடகைக்கு எடுத்து படம் எடுக்கக்கூடிய ஸ்டுடியோ, புதிய தங்குமிடங்கள், ஐந்து புதிய உணவு, பானக் கடைகள் என்று ஸ்மித் சாலை புத்துயிர் பெறுகிறது.
ஸ்மித் சாலையில் மறுசீரமைப்புத் திட்டங்களை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) அறிவித்த சைனாடவுன் வணிக சங்கம், பாரம்பரியமும் நவீனமும் சந்திக்கும் ஓர் இடத்தை உருவாக்க விரும்புவதாகக் குறிப்பிட்டது.
இதனால், வரவிருக்கும் ஆண்டுகளிலும் கட்டாயம் செல்ல வேண்டிய இடமாக சைனாடவுன் இருக்கும் என்றது அது.
மகிழ்ச்சியைக் குறிக்கும் சீன எழுத்தான ‘xi’ மறுசீரமைப்பின் கருப்பொருளாகவும் வடிவமைப்பு மையக்கருத்தாகவும் இருக்கும். அங்கு வருவோர் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்கக்கூடிய இடமாக ஸ்மித் சாலை இருக்கும் என்று சங்கம் கூறியது.
சைனாடவுன் பழமைப் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ள ஸ்மித் சாலை, உணவுகளுக்கும் பாரம்பரிய வணிகங்களுக்கும் பெயர் பெற்றது.
வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்ட 100 மீட்டர் நீள சைனாடவுனின் உணவுச் சாலை அமைந்துள்ள இடமும் அதுதான். 2001ல் திறக்கப்பட்ட அது கோவிட்-19 தொற்றுநோய்ப் பரவலின்போது 2021 அக்டோபரில் மூடப்பட்டது.
புத்துயிரூட்டல் திட்டம் அதன் பழைய துடிப்பை மீண்டும் கொண்டுவந்து அதிகமானோரை ஈர்க்க இலக்குக் கொண்டுள்ளது.
“ஸ்மித் சாலை, சைனாடவுனின் பண்பாட்டு இதயமாகச் செயல்படும். பரந்துபட்ட மரபு உணவு, கலை அனுபவங்கள் வருவோருக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் வழங்கும்,” என்று சங்கத்தின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி லிம் யிக் சுவான் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்டார்பக்ஸ், கிலினி போன்ற பல கடைகள் அங்கு திறக்கப்பட உள்ளன.
2024 ஆகஸ்ட்டில் சிங்கப்பூர் நில ஆணையம், நகர மறுசீரமைப்பு ஆணையம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவை, ஸ்மித் சாலையிலுள்ள எண் 11 முதல் 37 வரையுள்ள கடைகள், அதற்கு அருகில் நடையர் பகுதி ஆகியவற்றை மறுசீரமைப்புக்கான குத்தகையை சைனாடவுன் வணிகச் சங்கத்துக்கு வழங்கியது.
சாலையில் கடை அமைக்க அதிக சில்லறை, வாழ்க்கை பாணி வணிகங்களுடன் பேசப்படும் என்று திருவாட்டி லிம் கூறினார்.
ஸ்மித் சாலை மீண்டும் துடிப்புடன் இயங்கும் என்று கணிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.