ரயில் ஒன்றில் மின்தேக்கியிலிருந்து (பவர்பேங்க்) புகை வெளியானதைத் தொடர்ந்து தஞ்சோங் பகார் பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) நிலையத்தில் அந்த ரயிலிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இச்சவம்பவம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) பிற்பகல் கிழக்கே சென்றுகொண்டிருந்த ரயிலில் நிகழ்ந்தது. மின்தேக்கியிலிருந்து புகை வெளியானதைத் தான் கண்டதாகவும் அதிலிருந்து துர்நாற்றம் வந்ததை உணர்ந்ததாகவும் லியூ சியாவ்பாங் எனும் பயணி சியாவ்ஹொங்ஷு (Xiaohongshu) தளத்தில் சனிக்கிழமை (டிசம் பர் 6) தெரிவித்திருந்தார்.
மின்தேக்கி தீப்பிடிக்கவில்லை என்றும் அதில் வெடிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பயணி ஒருவர் உடனடியாக அவசரத் தொடர்பு விசையை அழுத்தி ரயிலிலிருந்து வெளியேறியதாக அவர் சொன்னார்.
பிறகு எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் எல்லாப் பயணிகளையும் வெளியேற்றி ஐந்து நிமிடங்களுக்குள் வந்த வேறு ரயிலுக்கு அவர்களை மாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார்.
மின்தேக்கிக்குச் சொந்தக்காரர் அங்கிருந்தோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக திரு லியூ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அளித்த பதிலில் எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் பிரிவின் (SMRT Trains) தலைவர் லாம் ஷியாவ் கய், ரயிலின் அவசரத் தொடர்பு விசை வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் அழுத்தப்பட்டதாகக் கூறினார். மின்தேக்கியிலிருந்து புகை வந்ததை அறிந்த ரயில் நிலைய ஊழியர்கள் எல்லாப் பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியதாக அவர் தெரிவித்தார்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சோதனைகள் நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட ரயில் பணிமனைக்கு அனுப்பப்பட்டது என்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் திரு லாம் சொன்னார்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மின்தேக்கிகளுடன் தொடர்புடைய 13 தீச்சம்பவங்கள் நேர்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 10ஆக இருந்ததென்றும் அது கூறியது.

