கிழக்கு - மேற்கு ரயில் பாதையின் தானா மேரா நிலையத்துக்கும் எக்ஸ்போ நிலையத்துக்கும் இடைப்பட்ட சேவை சனிக்கிழமை (மார்ச் 14) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளபோதும் மாற்றுவழிகளில் பயணங்கள் சுமுகமாக இருந்தன.
பெரும்பாலான பயணிகள் எந்தவித குழப்பமும் இன்றி பேருந்துச் சேவை எஸ்8 (S8) மூலம் பயணங்களைத் தொடர்ந்தனர்.
ரயில் தளமேடைகளிலும் நுழைவாயில்களிலும் வழிகாட்டிகள் பணியமர்த்தப்பட்டனர். பேருந்துச் சேவைக்கான மாற்றுவழி பற்றியும் அவர்கள் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கினர்.
ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனையுடன் கிழக்கு - மேற்குப் பாதையை இணைக்கும் பணிகள் நடைபெறுவதால் மார்ச் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிவரை தானா மேரா நிலையத்திற்கும் எக்ஸ்போ நிலையத்திற்கும் இடைப்பட்ட சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஒருசில பயணிகள் சமூக ஊடகங்கள் வழியாகவும் நிலையங்களில் உள்ள அறிவிப்புப் பதாகைகள் மூலமாகவும் சேவை நிறுத்தம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தனர்.
இருப்பினும் வேறு சில பயணிகள் மார்ச் 14ஆம் தேதி காலைதான் மாற்றம் குறித்து அறிந்துகொண்டதாகக் கூறினர். அவர்கள் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தில் தானா மேரா நிலையம் குறித்த தகவல்களை அறிவிப்புப் பதாகை மூலம் தெரிந்துகொண்டனர்.
எக்ஸ்போவில் வேலை செய்யும் சிலருக்குப் புதிய மாற்றம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டனர். ஆனால், வழிகாட்டிகளின் உதவியுடன் தானா மேராவிலிருந்து எக்ஸ்போவிற்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய எளிதாக இருந்ததாக அவர்கள் கூறினர்.
சிலர் பயணப் பெட்டிகளுடன் சாங்கி விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தனர். சேவை நிறுத்தம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த சிலர் கிளமெண்டி நிலையத்திலிருந்து தெம்பனிஸ் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து டவுன்டௌன் பாதையில் மாறி எக்ஸ்போ நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து சாங்கி விமான நிலையத்தை அடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனைப் பணிகளுக்காக மூன்றாவது முறையாக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதுவே இறுதி முறை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பணிமனைக்கான வேலை தொடங்கியபோது 2024ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை தானா மேரா நிலையத்திலிருந்து தெம்பனிஸ் நிலையம் வரையிலான சேவை நிறுத்தப்பட்டது.
அதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 8ஆம் தேதி வரை பிடோக் நிலையத்திலிருந்து தெம்பனிஸ் நிலையத்திற்கு இடைப்பட்ட சேவையும் தானா மேராவிலிருந்து எக்ஸ்போவிற்கு இடைப்பட்ட சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பணிமனைக்கான கட்டுமானப் பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கின.

