அண்டை வீட்டுக்காரர்களுடன் சுமுகமான உறவு; பெரும்பாலான குடியிருப்பாளர்கள் திருப்தி

அண்டை வீட்டுக்காரர்களுடன் சுமுகமான உறவு; பெரும்பாலான குடியிருப்பாளர்கள் திருப்தி

2 mins read
f28f1ca9-15e1-49d8-906b-7dbb559c6346
வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (நடுவில்) நகராட்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்டை வீட்டுக்காரர்களுடனான சுமுகமான உறவால் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுடன் தொடர்பு கொள்வதில் குடியிருப்பாளர்கள் தடைகளை எதிர்நோக்குகின்றனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கனிவுடைமை ஆய்வு இதனை தெரிவிக்கிறது.

இதில் பங்கேற்றவர்களில் 83 விழுக்காடு குடியிருப்பாளர்கள், அண்டை வீட்டுக்காரர்களுடன் உள்ள உறவால் திருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

வீட்டுக்கு வெவ்வேறு நேரங்களில் வருவது, கதவுகளை மூடி வைத்திருப்பது, ஒருவர், மற்றவரிடம் என்ன பேசுவது என்பது தெரியாமல் இருப்பது போன்றவை அண்டைவீட்டுக்காரர்களை தொடர்பு கொள்ள முடியாத காரணங்களில் சில.

கனிவுடைமை ஆய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. குடியிருப்பாளர்களிடையே நிலவும் கனிவன்பை கண்டறிவதற்காக சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாண்டு ஜனவரியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஏறக்குறைய ஆயிரம் சிங்கப்பூரர், நிரந்தரவாசி குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஆறு மாதங்களாக இணையத்தின்வழியாக கனிவன்பு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் கனிவன்புடன்கூடிய கூடுதல் நடத்தைக்கு இன்னும் முயற்சிகள் தேவை என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் கருதுகின்றனர்.

அண்டை வீட்டுக்காரர்கள் உதவியை ஏற்றுக் கொள்ளவும் உதவி செய்யவும் முன் வருகின்றனர். தேவையற்ற சத்தத்தை குறைத்துக் கொள்கின்றனர். முன்கூட்டியே, சத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அண்டை வீட்டுக்காரர்களிடம் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல், அதிகமான குடியிருப்பாளர்கள் தங்களுக்கு இடையிலானப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளை நாடாமல் தங்களுக்குள்ளாகவே நேரடியாக தீர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

அண்டை வீட்டுக்காரர்களிடையே இரைச்சல் போன்ற மோசமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு பிரிவு அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அரசாங்கம் அறிவித்தது. அப்போதிலிருந்து நிலைமை மேம்பட்டு வருகிறது.

புதிய சமூகத் தொடர்பு பிரிவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் சம்மதத்தைப் பெற்று அண்டை வீட்டுக்காரர்கள் சமரசத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது சத்தத்தின் திசை, நேரம், தீவிரம் தொடர்பான தரவுகளைச் சேகரிக்க வீட்டில் இரைச்சல் தொடர்பான உணர்வுக் கருவிகளை நிறுவ வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

பொது இடத்தில், சன்னல், மாடம் அருகில் அல்லது இதர இடங்களில் புகைப்பிடிக்காமல் இருப்பது, பொதுவான இடங்களை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க தங்களுடைய பங்கை ஆற்றுவது, இரைச்சல் அளவை குறிப்பாக இரவில் குறைத்து வைப்பது உள்ளிட்டவை பொதுவான, முக்கியமான அக்கம்பக்க நடவடிக்கைகள் என்று ஆய்வில் பலர் கூறியுள்ளனர்.

ஆய்வின் முடிவுகள், வருடாந்தர ‘ஒன்சர்விஸ் காக்கிஸ்’ (OneService Kakis:OSK) பாராட்டு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. இந்நிகழ்ச்சி, தேசிய வளர்ச்சி அமைச்சில் நடைபெற்றது. இதில் அமைச்சின்கீழ் செயல்படும் நகராட்சி சேவை அலுவலகத்தால் 47 பேர் அங்கீகரிக்கப்பட்டனர். விருது பெற்றவர்களில் பூன் லே வட்டாரம் ‘டி’ வசிப்போர் கட்டமைப்பின் தலைவர் ஜானி டானும், 38, ஒருவர்.

இவர், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்த ஒரு திட்டத்திற்கு தலைமையேற்று செயல்படுத்தினார்.

தாழ்வாரத்தில் உள்ள இடையூறுகள், நடைபாதைகளில் உள்ள தடைகள். வெற்றுத் தளங்களில் குப்பைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

‘குடியிருப்பு வட்டார சுவரோவியம்’ என்ற இந்தத் திட்டத்தால் குடியிருப்பாளர்களிடையே கனிவன்பை மேம்படுத்துவதற்காக குடியிருப்பு வட்டாரத்தைச் சுற்றி சுவரோவியங்கள் வரையப்பட்டன.

குறிப்புச் சொற்கள்